சமீபத்தில் வெளியான ‘வாய்தா’ திரைப்படத்தின் கதாநாயகி தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் தமிழ்த் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதாகும் இவர், சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக தங்கி இருந்து, தீபா என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே, அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் கதாநாயகனாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் சற்றே பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது வீட்டில் தீபா நேற்று மதியம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே, தீபாவின் உறவினர்கள் அவரை பலமுறை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால், தீபா தொடர்ச்சியாக போனை எடுக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது நண்பர் பிரபாகரன் என்பவரை அனுப்பி இருக்கிறார்கள். அவர், வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தபோதுதான், தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரபாகரன், சித்தூரிலுள்ள தீபாவின் சகோதரர் தினேஷுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
உடனே புறப்பட்டு வந்த தினேஷ், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தீபாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை நடத்தினர். பின்னர், அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, தீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்தது. அக்கடிதத்தில், “நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால், எனது காதல் கைகூடவில்லை. ஆகவே, இந்த உலகத்தை விட்டே பிரிந்து செல்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று தீபா எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அறிமுக நடிகை ஒருவர், திடீரென தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம், தமிழ்த் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.