சனிக்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான IV எல்லோபிரேகாட் தொடக்கத்தின் போது 2500 மதிப்பீட்டைத் தாண்டி இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார், வைஷாலி ரமேஷ்பாபு. இந்த சாதனையின் மூலம், வைஷாலி மற்றும் அவரது இளைய சகோதரர் பிரக்ஞானந்தா, ஆகிய இருவரும் வரலாற்றில் முதல் முறையாக கிராண்ட்மாஸ்டர் உடன்பிறப்பு ஜோடியாக மாறியுள்ளனர்.
வைஷாலி அவர்கள் தந்து 15 வது வயதில் பெண் சர்வதேச மாஸ்டர், 17 வயதில் பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் 20 இல் சர்வதேச மாஸ்டர் ஆனார். அவர் தான் தனது குடும்பத்தில் செஸ் விளையாடிய முதல் நபர். பிரக்ஞானந்தாவை விட நான்கு வயது மூத்தவர். தற்போது பெண் கிராண்ட்மாஸ்டருக்கான இந்தியாவின் 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் – கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லிக்கு பிறகு கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வைத்திருக்கும் மூன்றாவது பெண்மணி ஆவார்.
பிரக்ஞானந்தாவைப் போலவே வைஷாலியும் இளம் வயதிலேயே செஸ் விளையாடத் தொடங்கினார். அவர்களின் தாய் நாகலட்சுமி ஒருமுறை தனது இரண்டு குழந்தைகளும் தொலைக்காட்சி முன் அதிக நேரம் செலவழித்ததாகவும், அதனால் அவர்களை செஸ் வகுப்புகளில் சேர்த்ததாகவும் கூறினார். இருவரும் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்களுக்கு சதுரங்கத்தைத் தாண்டி வேறு எதிலும் அதிக ஆர்வம் இல்லை. “இருவரும் தினசரி அடிப்படையில் நிறைய மணிநேரங்களை சதுரங்கத்தில் செலவிடுகிறார்கள், இருவரும் சிறு வயதிலிருந்தே பள்ளிக்குச் செல்லவில்லை, கிட்டத்தட்ட ஒற்றை மனதுடன் சதுரங்கத்தில் பயிற்சி செய்கிறார்கள்.”என்று அவரது தாயார் கூறினார்.