“கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப் படுகின்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஒரு வழக்கறிஞர். தேசபக்த சுதந்திரப் போராளி மற்றும் கடல் வர்த்தகத்தில், பிரிட்டிஷ் ஏகபோகத்தை உடைத்து, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய அரசியல்வாதி மற்றும் சுதேசி இயக்கத்தை ஆதரித்த தமிழ் நாட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்.
வ.உ.சி., தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள பிரபல வழக்கறிஞர் உலகநாதன் மற்றும் பரமாயி அம்மாளுக்கு மகனாக, 5 செப்டம்பர் 1872ல் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, 1894ல் வழக்கறிஞரானார்.
சிதம்பரம் பிள்ளை, பால கங்காதர திலகர் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனால் கவரப்பட்டு, தேச விடுதலைக்கு போராடினார்.
1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பரவலான, “சுதேசி இயக்கத்தின் எழுச்சி” ஏற்பட்டது. பிரிட்டிஷ் நீராவி கப்பல் நிறுவனத்தின் ஏகபோகத்தை உடைக்க, வ.உ.சி. முடிவு செய்த போது, தமிழ்நாட்டில், வெளிநாட்டு பொருட்களின் புறக்கணிப்பு, தீவிரமாக இருந்தது. எனவே, நிறுவனங்கள் சட்டம் 1882ன் கீழ் பதிவு செய்யப்பட்ட, “சுதேச நீராவி கப்பல் நிறுவனத்தை”, வ.உ.சி., 16 அக்டோபர், 1906 அன்று, தொடங்கினார். இது, இந்திய இயக்கத்தில், உள்நாட்டு நிறுவனங்களின் முன்னோடி, எனக் கூறலாம். சி.ராஜகோபாலச்சாரி கப்பலைத் துவக்கி வைத்தார்.
திலக் மற்றும் அரவிந்தோ கோஸ் 1907ல், பிரான்சிலிருந்து “எஸ்.எஸ். காலியோ” கப்பலைப் பெற வ.உ.சி.க்கு உதவினார்கள். “வந்தே மாதரம்” என அச்சடிக்கப்பட்ட கொடியை, தனது கப்பலின் கொடி மரத்தில் பறக்க செய்து, ‘வந்தே மாதரம்’ என்ற சுதந்திர தாரக மந்திரத்தை, மக்கள் வாயால் முழங்கச் செய்தார். தூத்துக்குடிக்கும் -கொழும்பிற்கும் இடையில், 40,000 பைகள் கார்கோஸ் மற்றும் 13,000 பயணிகள் பயணிக்கக் கூடியதாக இருந்தது, சுதேசி கப்பல்.
பிரிட்டிஷார், பல தடைகளை கொடுத்தார்கள். ஆனால், ‘கப்பலோட்டிய தமிழன்’ தடைகளை பற்றி கவலைப் படவில்லை. அவர், தடைகளைத் தாண்டி முன்னேறினார். பல இந்திய முதலீட்டாளர்கள், அவரது முயற்சியில் முதலீடு செய்தனர் மற்றும் பல வணிகர்கள், சுதேசி இயக்கத்திற்கு ஒத்துழைப்பு தந்தவாறு, தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதில், சுதேசி கப்பல்களை பயன் படுத்தினார்கள்.
பி.ஐ.எஸ்.என் (B.I.S.N) – “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” நிறுவனத்துடன் தொடர்புடைய ஆங்கிலேய மக்கள், வணிகத்தில் போட்டியையும், சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தின் புகழையும் தாங்க முடியாமல், வணிகத்திலிருந்து வ.உ.சி.யை தூக்கி எறிய, தீர்மானித்தார்கள். சிதம்பரம் பிள்ளை தேசத் துரோகத்திற்காக கைது செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின், 123-A மற்றும் 153-A பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறைக்கு அனுப்பப் பட்டார். தேசத் துரோக குற்றச்சாட்டு எதற்கு என்றால், அவர் மக்களை “வந்தே மாதரம்” என்று சொல்ல வைத்ததற்காக!
வ.உ.சி., தூத்துக்குடி மண்ணில் தீவிர தேசபக்தி, தேசியவாதம் மற்றும் விடுதலைக்கான விதைகளை சுப்பிரமணிய சிவா மற்றும் வாஞ்சிநாத ஐயர் ஆகியோருடன் இணைந்து, தேசிய உணர்வை மக்களிடையே பரப்பினார். இது, பிரிட்டிஷாரை கோபப் படுத்தியது. கலெக்டர், உத்தரவின் பேரில், வ.உ.சி. கைது செய்யப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை – நாற்பது ஆண்டுகள், சிறை தண்டனைக்கு ஆளாக்கப் பட்டார். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் பிரைவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்யப்பட்ட பின், அவரது தண்டனை குறைக்கப் பட்டது.
வ.உ.சி., சிறைச் சாலையில் அனுபவித்த கஷ்டங்கள், சாதாரணம் அல்ல. சிறைச் சாலையில், அவர் சாதாரண தண்டனை கைதி போன்று அல்லாமல், மிக கொடூரமாக நடத்தப் பட்டார். காளைகள் இழுக்க வேண்டிய செக்கை, வ.உ.சி.யை மதிய நேரத்து உச்சி வெயிலில், இழுக்கச் செய்தார்கள், ஆங்கிலேயர்கள். இறுதியாக, 12 டிசம்பர், 1912 அன்று, சிறை தண்டனையிலில் இருந்து விடுதலை பெற்றார்.
சிறையிலிருந்து வெளியே வந்த போது, வ.உ.சி., தனது நிறுவனம் கலைக் கப்பட்டு, கப்பல்கள் ஏலம் விடப் பட்டதை அறிந்தார். அவரது வழக்கறிஞர் உரிமமும், ரத்து செய்யப் பட்டது. குடும்பத்தை நடத்த, அவர் சென்னையில் ஒரு சிறிய கடையை அமைத்து, வருமானத்தை தேடிக் கொண்டார். வருமானம் போதவில்லை.
ரத்து செய்யப்பட்ட அவரது வழக்கறிஞருக்கான உரிமத்தை, அவருக்குத் திரும்பக் கொடுக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டு, வழக்கறிஞராக, மீண்டும் பணியாற்றுவதற்கானஅனுமதியும் பெற்றார்.
கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக, தனது பயிற்சியைத் தொடர்ந்தார். சில காலத்திற்கு பின்பு, மீண்டும் தூத்துகுடிக்கே சென்றார். சில புத்தகங்களையும் எழுதினார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை 18 நவம்பர், 1936 அன்று காலமானார்.
கிறிஸ்தவ சகாப்தம் தொடங்குவதற்கு, நீண்ட காலத்திற்கு முன்பே, பாரதத்தின் இந்துக்கள் ரோம் மற்றும் எகிப்துடன், கடல் வணிகத்தை நிறுவி உள்ளனர். மௌரிய மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களும், வங்காள விரிகுடாவைத் தாண்டி, கிழக்குக் கடலின் எஜமானர்களாக, திகழ்ந்தார்கள். தமிழ் மன்னரான ராஜேந்திர சோழன், இந்தோனேசியா வரை கடல் வழியாக சென்று, தனது கொடியை நாட்டினார். இந்தியர்கள், நீண்ட காலமாக மறந்து போன, கடல் வர்த்தக வணிகத்தை, ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை’, மீண்டும் கொண்டு வந்தார்.
அவரது புரட்சிகரமான நிலைப்பாடு, தைரியமான சவால்கள், கஷ்டங்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான தியாகங்கள், அவரைத் தமிழ்நாட்டின் தேச பக்தர்களின் பட்டியலில் நீங்கா இடம் பெற்று தந்தது.
வ.உ.சி, தேசியவாதத்தின் அலைகளால், தமிழகத்தின் இதயங்களை சுதந்திர போராட்டத்திற்காக வலுவாக்கினார். வ.உ.சி.யின் 150வது பிறந்த நாள் அன்று, அவர் செய்த தியாகங்களை எண்ணி, அவரை நினைவு கூறுவோமாக…
– Dr.M.Vijaya