அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர், கோவையில் உள்ள 3 மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கலந்து கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார் : தமிழக அரசு, பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறினாலும், பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களை ஒன்றாக ஒரு வகுப்பில் ஓர் ஆசிரியரை வைத்துதான் பாடம் நடத்துகின்றனர். ஆசிரியர் தேர்வு என்பது நீண்ட காலமாக இழுபறியாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி பள்ளிகளுக்கு என்ன தேவையோ அதை செய்து தர வேண்டும் என்று கூறினார்.