பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தி.மு.க.வை மிக கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர், கோவை புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ;
“புலியகுளம் பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு நிலவி வந்தது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி, இன்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பம்பிங் ஸ்டேஷன் கட்டி மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மருந்து சப்ளையில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை.
அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் முதல்வரின் வீட்டில் இருக்கும் மிக முக்கிய உறுப்பினர் ஒருவர் தனியாக அழைத்துப் பேசுகிறார். இவ்வளவு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை சப்ளை செய்ய முடியும் என்கின்றனர். இருக்கும் மருந்தைத்தான் எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாத மருந்தை எழுதிக் கொடுக்கக் கூடாது என அரசு மருத்துவர்களுக்கு மறைமுகமாக அரசு மிரட்டல் விடுக்கிறது.
உயிர் காக்கும் மருந்தில் அரசியல் செய்து, நோயாளிகளின் உயிருக்கே வேட்டு வைக்கும் செயல் இது. தவற்றை சுட்டிக் காட்டினால் அதை சரி செய்ய வேண்டிய அரசு, அதை செய்யாமல் அந்தத் திட்டத்தையே இல்லாமல் செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
என்ன அரசாங்கம் இது. ஒவ்வொரு துறையிலும் உள்ள குடும்ப ஆதிக்க சக்தியின் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தில்தான் சொத்துகளை பாகம் பிரிப்பார்கள். முதல்வரின் குடும்பத்தில் அதேபோல 10 துறைகள் மகனுக்கு, 10 துறைகள் மருமகனுக்கு என்ற நிலையில்தான் அரசாங்கம் நடக்கிறது. தமிழ்நாட்டை கூறுபோட்டு பாகம் பிரிக்கின்றனர். மருமகன் சொல்லித்தான் மருந்து சப்ளை நிறுவனத்திடம் பேசுவதாக வெளிப்படையாகச் சொல்கின்றனர்” என்றார்.