பெ. வரதராஜுலு நாயுடு
(ஜூன் 4, 1887 – ஜூலை 23, 1957)
பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர், சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
அன்றைய சேலம் மாவட்டம் இராசிபுரத்தில், வரதராஜுலு பிறந்தார். தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24 ஆம் வயதில், ருக்மணி என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார்.
உயர்நிலைக் கல்வி கற்கும் போதே, நாடெங்கும் பரவிய ‘வந்தேமாதரம்’ இயக்கம் இவரைக் கவர்ந்தது. “முற்போக்காளர் சங்கம்” எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார். “அன்னியத் துணி விலக்கு”, “சுதேசியம்” எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால், பள்ளியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பத்தொன்பது வயதிலேயே, தேசிய அரசியலில் ஈடுபட்டார். சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று, மருத்துவத் தொழிலில் பெரும் புகழ் பெற்றார்.
1906 ஆம் ஆண்டில், 19 வயதில், இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1916 ல், தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார். 1918 ல், மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக, முதல் சிறைவாசம் விதிக்கப் பட்டது. சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டு, பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. விசாரணையில், நாயுடுவின் சார்பில் சி. இராஜகோபாலாச்சாரி வாதாடினார். உயர்நீதிமன்ற மேல் முறையீட்டில், இராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க வாதத்தால், நாயுடு விடுதலை பெற்றார்.
சேலத்தில் வாரப் பதிப்பாக, 1919 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த “தமிழ்நாடு” இதழும், அவர் எழுதிய இரு கட்டுரைகள், அரசுத் துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு, விதிக்கப் பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால், இரண்டாம் சிறை வாசத்தை ஏற்றார்.
1923ல், பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில், தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. இது மூன்றாவது சிறைத் தண்டனையாகும்.
1920 ஆகஸ்டில், காந்தியடிகள் திருப்பூர் வந்த போது, வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். 1921 ல், மீண்டும் சேலம் வந்த போது, இவரது வீட்டில் தங்கினார். அப்போது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில், நாயுடுவின் மனைவி ருக்மணி, தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்தார்.
1922 ல் காந்தியடிகள் சிறைப் படுத்தப்பட்ட போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான், வரிகட்ட முடியும் என அறிவித்து, புதுமையை நிகழ்த்தினார்.
வரி மறுப்பைக் குறிப்பிட்டு, டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம், காந்தியடிகளின் “யங் இந்தியா”வில் வெளி வந்தது.
1925 ல், தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார். 1929 ல், காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு, காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்னர் ஆரிய சமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப் பட்ட போது,அதனை முறியடிப்பதற்கென, வரதராஜுலு பிரசாரம் செய்தார். ஜி. சுப்பிரமணிய ஐயர், பாரதியார், திரு.வி.க. வைத் தொடர்ந்து, தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் நாயுடு.
இதழியல் பணி :
இவரது இதழியல் பணி “பிரபஞ்சமித்திரன்” எனும் வார இதழ் மூலம் தொடங்கியது. மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும்,சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப் பட்ட “பிரபஞ்சமித்திரன்” மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்த போது, நாயுடு 1916 ல், அந்த இதழை வாங்கினார். அவர் ஆசிரியரானார். இரண்டாண்டுகள் வெளி வந்தது.
1918 ஆம் ஆண்டு, நாயுடு சிறைப் பட்ட போது, ஆயிரம் ரூபாய் ஈடு, அரசால் கேட்கப் பட்டு, பத்திரிகை முடக்கப் பட்டது.
பிரபஞ்ச மித்திரனுக்குப் பிறகு “தமிழ்நாடு” இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து பணி ஆற்றிய நாயுடுவின் பணி, ஒரு வரலாற்றுச் சாதனையாகும். 1925 ல், தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையைத் துவக்கினார். 1931 ல், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலப் பத்திரிகையின் சென்னை பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில், நிதி நெருக்கடியால், விற்பனை செய்யப் பட்டது.
விடுதலை பெற்ற இந்தியாவில், நாயுடு 1951ல், சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1952ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.
“தென்னாட்டுத் திலகராக”ப் புகழ் பூத்த வ.உ.சி, 1934ல் “தேசிய சங்கநாதம்” எனும் தலைப்பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.