ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு உகந்தது என்று மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. இதன் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. இந்த மசூதியின் சுவற்றில் சிருங்கார கவுரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஹிந்துக்கள் தினமும் பூஜை நடத்தி வந்தனர். ஆனால், 1992-ம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய மசூதி இடிக்கப்பட்ட பிறகு, சிருங்கார கவுரி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆகவே, சிருக்கார கவுரி அம்மன் ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங், லக்ஷ்மி தேவி, சீதா சாஹு, மஞ்சு வியாஸ், சோஹன் லால் ஆர்யா உள்ளிட்ட 5 ஹிந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, காசி விஸ்வநாதர் கோயிலில் வெறும் நந்தி மட்டும் இருப்பதால், அதன் எதிரே உள்ள ஞானவாபி மசூதியில்தான் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் கூறிவந்தனர். இந்த சூழலில், டெல்லி பெண்கள் மனு தொடர்பாக ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆய்வு நடத்த ஒரு குழுவையும் நியமித்தனர். இக்குழுவினர் நடத்திய ஆய்வு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹிந்துக்கள் கூறிவந்ததுபோலவே, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான மனுவை விசாரிக்கக் கூடாது என்று மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடந்து வந்த நிலையில்தான், ஹிந்து பெண்களின் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உகந்தது என்று மாவட்ட நீதிமன்றம் இன்று கூறியிருக்கிறது.
மேலும், எதிர்வரும் 22-ம் தேதி மேற்படி மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். தவிர, மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். இத்தீர்ப்பைக் கேட்ட ஹிந்து பெண்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இது ஹிந்துக்களுக்கு கிடைக்க மிகப்பெரிய வெற்றி என்று ஹிந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கு ஞானவாபி மசூதியின் ஒரு பகுதி சுவற்றில் அமைந்திருக்கும் சிருங்கார கவுரி அம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் என்றாலும், ஞானவாபி மசூதி உள்ளே சிவலிங்கம் இருப்பதால், ஹிந்து கோயிலை ஆக்கிரமித்து மசூதி கட்டப்பட்டிருப்பதாக சர்ச்சை நடந்து இருக்கிறது. ஆகவேதான், இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை முன்னிட்டு, இன்று வாரணாசி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.