சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்று சுவரில் ஓவியம் வரைந்து வருகின்றனர் கல்லூரி மாணவர்கள். இவர்களிடம் தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு வாதம் செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பெரும்பாலான சுவர்கள் அசுத்தமாகவும், போஸ்டர் ஒட்டியும் பார்ப்பதற்கு முகம் சுழிக்கும் அளவில் உள்ளதாக பொதுமக்கள் உட்பட பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். எனவே, இதனை மாற்றும் விதமாக கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து சுவரில் ஓவியம் வரைந்து வரும் பணியில் இன்று வரை ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள சுவர்களில் மாணவர்கள் ஒவியம் வரைந்துள்ளனர். அப்பொழுது, அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், எங்கள் தலைவர் திருமாவளவன் பெயரை ஏன்? அழித்தீர்கள் என்று கடும் கோவம் அடைந்துள்ளனர். நாங்கள் கல்லூரி மாணவர்கள், எங்கள் சொந்த பணத்தில் தான் இந்த பணியை மேற்கொள்கிறோம், எங்கள் நோக்கம் சென்னையில் உள்ள சுவர்களை அழகுபடுத்துவதே என்று கூறியுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சியின் அனுமதியை பெற்று தான் இதனை செய்கிறோம் என்று தெரிவித்து இருந்தனர்.
ஆனாலும், வி.சி.க. நிர்வாகிகள் அது எப்படி எங்க தலைவர் பெயரை மட்டும் அழிப்பீர்கள் பக்கத்து சுவரில் இருக்கும் தி.மு.க. பெயரை ஏன்? அழிக்கவில்லை என்று மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அந்த பெயரையும் நாங்கள் அழிப்போம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். அதனை காதில் வாங்கிக் கொள்ளாத வி.சி.க.வினர் மாணவர்களை ஓவியம் வரையக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். மேலும், வரைந்த ஓவியத்தை எல்லாம் அழித்து விட்டு திருமாளவன் பெயரை மீண்டும் அங்கே எழுதியுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் பத்திரிக்கையாளரிடம் கூறிதாவது;
நாங்கள் பல இடங்களில் ஓவியம் வரைந்து வருகிறோம். இதுவரை எந்த கட்சி நிர்வாகிகளும் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ஆனால், எங்களிடம் இதுபோன்று வி.சி.க. நிர்வாகிகள் நடந்துக் கொண்ட விதம் எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள்.