வேலூர் மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 1,145 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், வேலூர் மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய சலைகள், பாதாள சாக்கடை திட்டம், புதிய பஸ் நிலையம், நேதாஜி மார்க்கெட் அடுக்குமாடி வணிக வளாகம் தரம் உயர்த்துதல், பொழுது போக்கு அம்சங்களுடன் பாலாற்றங்கரை மேம்படுத்தும் பணி, வாகன நிறுத்தம், சீரான சாலை, சிறுவர்களுக்கான பூங்கா, கோட்டையை சுற்றுலா தலமாக வளர்ச்சி அடையச் செய்வது, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், மின்தேவையை குறைக்க சோலார் தகடுகள் அமைத்தல் உட்பட 16 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பபணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. மேலும், சாலை அமைக்கும் பணியில் அலட்சியம் காட்டப்படுகிறது. குறிப்பாக, சாலைகளில் நிற்கும் வாகனங்களோடு சேர்த்து ரோடு போடுவது, குடிநீர் குழாய்களை அகற்றாமல் அதன் மேலேயே ரோடு போடுவது என பல சீர்கேடுகளும், முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. ஆகவே, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கோரியும், வேலுார் நகர பா.ஜ.க. சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. ஆனால், அனுமதியில்லாமல் முற்றுகை போராட்டம் நடத்தியதாகட மாவட்டத் தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர்கள் ஜெகன், பாபு, மகேஷ், பொருளாளர் தீபக், துணைத் தலைவர்கள் சரவணகுமார், யுவராஜ், யெலாளர்கள் ஜெகன், சுகுணா உள்ளிட்ட 200 பேரை வேலுார் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க. போராட்டத்தால் மாநகராட்சி அலுவலக கேட் மூடப்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். எனினும், போலீஸாரையும் மீறி பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 200 பேரை, போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.