நாம கஷ்டப்பட்டு மாடா உழைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள ஜெயிக்க வைக்கிறோம். ஆனா, ஜெயிச்ச பிறகு அவங்க ஜாலியா கார்ல போறாங்க. நாம பெட்ரோலுக்கு காசு இல்லாம திண்டாடிக்கிட்டு இருக்கோம் என்று கட்சிக் கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகி பேசியிருப்பது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்ட தி.மு.க.வின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசுகையில். “நான் 40 வருடஷமா கட்சியில் இருக்கேன். எங்க பகுதியில் அ.தி.மு.க.வுக்குதான் அதிகமா ஓட்டுப்போடுவாங்க. அப்படி இருந்தும் 2 முறை தலைவரா இருந்திருக்கிறேன். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் நமது கட்சியைச் சேர்ந்த 40 வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதுல என்ன வேடிக்கைன்னா, நாமா கஷ்டப்பட்டு அவங்கள ஜெயிக்க வைக்கிறோம். ஜெயிச்ச பிறகு, அவங்க ஜாலியா கார்ல போறாங்க. ஆனால், நாமா வண்டிக்கு பெட்ரோல் கூட காசு இல்லாம திண்டாடிக்கிட்டு இருக்கோம். அவங்க வீட்டுக்கு போனா திரும்பிப் பார்க்கக் கூட ஆள் இல்லை. அதேமாதிரி மெட்ராஸுக்குப் போறோம், சாப்பிட்டியான்னு கேட்கக்கூட ஆள் இல்லை.
இதவிட கொடுமை என்னன்னா, மேற்கு ஒன்றியத்தில் இருக்கும் மூத்த தலைவர் ஒருவர், 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு வேலை தர்றேன். 12 சதவிகிதம் கமிஷன் தர்றியான்னு கேட்குறாரு. எப்படிங்க நான் 12 சதவிகிதம் குடுக்க முடியும். அ.தி.மு.க.வுல இருந்து தி.மு.க.வுக்கு வந்து 40 வருஷமா கட்சியில இருக்கேன். தொண்டர் படையில் இருந்து படிப்படியா முன்னேறி ஒன்றிய துணைச் செயலாளர் பதவி வரைக்கும் வந்திருக்கேன். இப்ப மறுபடியும் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளரா இருக்கேன். 2 முறை தலைவரா இருந்திருக்கிறேன். எவ்வளவு செலவு பண்ணிருப்பேன். இவ்வளவு கஷ்டப்பட்டு மாடா உழைக்கிறோம். 12 சதவிகிதம் கமிஷன் கேட்டா என்னங்க அர்த்தம்” என்று மிகவும் விரத்தியுடன் பேசியிருக்கிறார். இவரது பேச்சைக் கேட்டு உறுப்பினர்களோ விசிலடித்து கைதட்டி ரசித்தனர். இதனால், அமைச்சர் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவமானத்தில் நெளிந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.