வேலூர் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த முஸ்லீம் பெண்ணிடம், புர்காவை கழற்றச் சொல்லி மிரட்டிய இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலூர் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இக்கோட்டையின் அகலியில் உள்ள மதில் சுவர் மீது சுற்றி வருவதில் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதி பிரியம். இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் சிலர், பிற மதத்தைச் சேர்ந்த ஆண்களுடன் சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள், மதில் சுவர் சுற்றுப் பாதையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிலர், புர்கா, ஹிஜாப் அணிந்து கொண்டு எப்படி நீங்கள் வேற்று மதத்தைச் சேர்ந்த ஆண்களுடன் ஊர் சுற்றலாம் என்று அப்பெண்களிடம் கேள்வி எழுப்பியும், புர்கா, ஹிஜாப்பை கழற்றும்படியும் வற்புறுத்தினர்.
இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்னர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், முஸ்லீம் பெண்களை மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூர் வடக்கு காவல் நிலையத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மேற்கண்ட சம்பவம் தொடர்பாக வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, முஸ்லீம் பெண்களை மிரட்டியது அதே சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில், சில சிறுவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனெவே, வேலூர் கோட்டையில் பல்வேறு குற்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. இதைத் தடுக்க அதிகப்படியான காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆகவே, வேலூர் கோட்டை பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன், போலீஸார் ரோந்து சென்று இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.