வேலூரில் முறையாக உணவு அளிக்காததால் கருணை இல்லத்திலிருந்த 67 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது பெரியராமநாதபுரம். இப்பகுதியில் செயின் ஜோசப் என்கிற பெயரில் கருணை இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை தாமஸ் என்பவர் நடத்தி வந்தார். இங்கு ஆதரவற்ற முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் தங்க வைக்கப்பட்டு, உணவு அளிக்கப்பட்டு வந்தது. இந்த இல்லத்தை பராமரிக்க மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் நிதியுதவியும் பெறப்பட்டு வந்தது. ஆனால், இந்த கருணை இல்லத்தை முறையாக பராமரிக்காததால், கடந் 2 ஆண்டுகளுக்கு முன்பு கருணை இல்லம் மூடி சீல் வைக்கப்பட்டது. எனினும், இந்த கருணை இல்லம் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்தாண்டு மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது இங்கு 33 பெண்கள், 34 ஆண்கள் என மொத்தம் 67 முதியவர்கள் தங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், கருணை இல்லத்தின் மீது மீண்டும் புகார்கள் வரத் தொடங்கின. இல்லத்தை முறையாக பராமரிக்கவில்லை, முதியவர்களுக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என்று வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, வேலுார் கோட்டாட்சியர் பூங்கொடி, காட்பாடி தாசில்தார் ஜெகன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, சரியாக உணவு வழங்கப்படாததால் பசியும், பட்டினியுமாக இருந்த முதியோர்கள் மயக்க நிலையில் கிடந்தனர். இதைத் தொடர்ந்து, முதியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, கருணை இல்லத்தை மீண்டும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருக்கிறார்.