வி.ஹெச்.பி. சார்பில் நடத்தப்படவிருந்த முருகன் ரத யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிப்பது, தீபாவளி பண்டிக்கைக்கு வெடி வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு விதிப்பது என தொல்லை கொடுத்து வருகிறது. இந்த சூழலில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் தர்ம ரக்ஷா விழிப்புணர்வு யாத்திரை என்கிற பெயரில் முருகப் பெருமான் ரத யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த யாத்திரை டிசம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், இந்த யாத்திரையை வட தமிழகத்தில் நடத்த தமிழக அரசு தடை விதித்து விட்டது. எனவே, வி.ஹெச்.பி. அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி, ரத யாத்திரைக்கு அனுமதி கோரியிருக்கிறது.
இதையடுத்து, வட தமிழகம் தவிர்த்து தென் தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்தது. ஆனால், இந்த யாத்திரைக்கும் தமிழக அரசு தடைவிதித்து விட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி கோரியது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு. எனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்துவிட்டது. தமிழகத்தில் தற்போது தைப்பூசம் மற்றும் சபரிமலை விரத காலமாகும். இந்த காலகட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் (பிளாஸ்டிக் தவிர்த்தல், வரிசையில் நின்று தரிசித்தல், நல்ல உணவு உண்ணுதல், சுத்தம் சுகாதாரம் பேணுதல்) என்று பக்தர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே இந்த ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படி இருக்க, இந்த ரத யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.