விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரின் 23,000 கோடி கடனை வங்கிகளிடம் ஒப்படைத்திருக்கிறது அமலாக்கத்துறை.
இந்திய தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர். இவர்களை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், மேற்கண்ட மூவரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை, அச்சொத்துக்களை ஏலம் விட்டு, அவரவர் வங்கிகளுக்குச் செலுத்தி வருகிறது. அந்த வகையில், மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் 22,586 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்றிருக்கிறார்கள். இதில், 80 சதவிகிதம் அளவுக்கு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. அதாவது, 18,170 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி இருந்தது.
இவற்றை ஏலம் விட்டு, கடந்தாண்டு 9,371 கோடி ரூபாயை வங்கிகளுக்குச் செலுத்தியது அமலாக்கத்துறை. இதன் பிறகு, கடந்த ஜூலை மாதம் ஏலம் விடப்பட்ட சொத்துக்களின் மூலம் கிடைத்த 2,650 கோடி ரூபாய் வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டது. தற்போது, மீதமுள்ள சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு 8,411 கோடி ரூபாய் திரட்டப்பட்டு வங்கிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் 23,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரின் மோசடிகளால் இந்திய வங்கிகளுக்கு ஏறக்குறைய ரூ. 22,858 கோடி இழப்பு ஏற்பட்டது. 3 பேரும் வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் வட்டியை ஈடு செய்ய அவர்களது சொத்துக்களைக் கையகப்படுத்தி வருகிறோம். அந்த சொத்துக்கள் கோர்ட் மேற்பார்வையில் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இதுவரை மொத்தம் ரூ.23,000 கோடி வங்கிகளிடம் ஒப்படைத்திருக்கிறோம். மேலும் பல சொத்துக்களையும் கையகப்படுத்த நடவடிக்கை தொடர்கிறது” என்றார்கள்.