கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த 15 குழந்தைகளை கோவை – சென்னை மற்றும் சென்னை – கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர். ‘ஃப்ளைடு ஆஃப் ஃபேண்டசி’ (Flight to Fantasy) என்ற பெயரில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், ஆதரவற்ற பெண் குழந்தைகள் மேற்கொண்ட விமானப் பயணம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
“ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க இந்த சேவையை மூன்று வருடமாக செய்து வருகிறோம், என்று கூறுகின்றனர் தன்னார்வ அமைப்பினர்.
கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டு, வேளச்சேரியில் இயங்கும் ஃபீனிக்ஸ் மால் வணிக வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விளையாட்டு, ஷாப்பிங், ஜங்கிள் போன்ற புதிய அனுபவங்களை தந்து, சென்னையின் பிரபல உணவகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, குழந்தைகள் உணவருந்த வைக்கப்பட்டனர். அதன் பின்னர், மீண்டும் சென்னையில் விமானம் மூலமாகவே கோவை திரும்பினர்.