திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செந்துறை கிராம சொத்துக்கள் தங்களுடையது என வக்பு வாரியம் கூறியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி அருகே உள்ள கிராமம் முள்ளிக்கருப்பூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு, அந்தநல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. தனது, 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை, ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க முடிவு செய்து இருக்கிறார். இதையடுத்து, 3.50 லட்சம் ரூபாய்க்கு கிரைய பத்திரம் ஏற்பாடு செய்து, அதனை பதிவு செய்ய கடந்த 5 -ஆம் தேதி திருச்சி மூன்றாம் எண் சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று இருக்கிறார்.
அப்போது, தான் ராஜகோபாலுக்கு இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து இருக்கிறது. ‘நீங்கள் பத்திரம் பதிய வந்திருக்கும் நிலம் உங்களுடையது அல்ல. அது, வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்து. நீங்கள், ‘வக்பு வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்று வாருங்கள் என சார் -பதிவாளர் முரளி கூறியிருக்கிறார். இதற்கு, ராஜகோபால், அந்த நிலம் கடந்த 1992 – ஆம் ஆண்டு முதல் என்னிடம் உள்ளது. என், சொத்தை விற்க நான் ஏன்? வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்?’ என்று ஆவேசமாக கேட்டு இருக்கிறார்.
அதற்கு, சார் – பதிவாளர் முரளி, அக்கிராமத்தில் (திருச்செந்துறை) உள்ள எந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றாலும், இதுதான் நடைமுறை என தெரிவித்து இருக்கிறார். இதுதவிர, கிராமம் மொத்தமும் தங்களுக்கு சொந்தமானது என, வக்பு வாரியம் பத்திரப்பதிவு துறைக்கு ஆவணங்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. யார்? அங்கு நிலத்தை வாங்கினாலும், விற்றாலும் தடையில்லா சான்றிதழ் எங்களிடம் கேட்டு வாங்கிய பின்பே பத்திர பதிவு செய்ய வேண்டும் என வக்பு வாரியம் கூறியிருப்பதாக முரளி விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும், 250 பக்க வக்பு வாரியத்தின் கடித நகலையும் ராஜகோபாலிடம் சார் – பதிவாளர் காண்பித்து இருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ராஜகோபால் இத்தகவலை, தனது கிராம மக்களிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து, ஒட்டு மொத்த கிராமமே தற்போது அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது.
ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட பத்திரம், சிட்டா, அடங்கல், வருவாய் ‘ஏ’ பதிவு, வில்லங்க சான்று உள்ளிட்ட அரசு ஆவணங்கள் தங்களிடம் இருக்கும் போது ஒட்டு மொத்த கிராமமே தங்களது சொத்து என வக்பு வாரியம் எப்படி? கூற முடியும் என கிராம மக்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதுகுறித்தான, தகவல் மாவட்ட கலெக்டருக்கு தெரியவரவே அவர் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி அல்லுார் பிரகாஷிடம் கேட்ட போது; திருச்செந்துறை கிராமம் விவசாய பூமி. இங்கு, வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள். இந்த கிராமமே, வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. திருச்செந்துறை கிராமத்துக்கும் வக்பு வாரியத்திற்கும் என்ன? தொடர்பு இருக்கிறது. காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் இந்த திருச்செந்துறை. அங்கு, பாடல் பெற்ற மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது என்று பல்வேறு ஆவணங்கள், சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க வக்பு வாரியம் கூறும் கருத்தை ஏற்க முடியாது. இந்த கோவிலுக்கு திருச்செந்துறை கிராமத்தையும் தாண்டி வெளியேயும் சுமார் 369 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. அப்படியெனில், இந்த கோவில் நிலமும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதா? என்ற கேள்வியை அவர் முன்வைத்து இருக்கிறார்.