தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை ஆங்காங்கே பெய்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் மிகத் தீவிர கனமழை தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
அதேபோல டிசம்பர் மாதத்தில் பின்னாட்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது. அதன்பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை எங்கும் இல்லாத ஒரு சூழலே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழை இன்னுமே கூட தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமையான செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோயிலின் வளாகத்தில் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில் கோயில் வளாகத்தில் தேங்கிய மழை தண்ணீரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.