டில்லிக்கு தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு தங்களிடம் உபரி நீர் இல்லை” என உச்சநீதிமன்றத்தில் ஹிமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
டில்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்க உ.பி., ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என டில்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சுமார் 137 கியூசெக்ஸ் நீரை கூடுதலாக திறக்க வேண்டும் என ஹிமாச்சல பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்த தகவலை ஹரியானா அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை ஹரியானா மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கோடைகால அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா வரலே ஆகியோர் முன்பு ஹிமாச்சல பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவில், டில்லி அரசுக்கு திறக்கும் அளவுக்கு தங்களிடம் 136 கியூசெக்ஸ் உபரி நீர் இல்லை என தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் நீதிபதிகள் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையே யமுனை நீரை பகிர்ந்து கொள்ளும் விஷயம் சிக்கலானது. இது குறித்து முடிவு செய்ய நீதிமன்றத்திடம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை என்றனர். மேலும் இது குறித்து டில்லி அரசு, ‛ அப்பர் யமுனை நதிநீர் வாரியத்திடம்’ மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.