திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள். செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திமுக முப்பெரும் விழா. பவள விழா நிறைவு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி. க.பொன்முடி. ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் டி.ஆர்.பாலு. முதன்மை செயலாளர் கே.என்.நேரு. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விருது மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இதில் இயற்கை விவசாயியான 108 வயது மூதாட்டி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது. திமுக மூத்த உறுப்பினரான அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு அண்ணா விருது. முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பிக்கு கலைஞர் விருது. திமுக தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருது, முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருது, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டது.
இந்தநிலையில் பேராசிரியர் விருது பெற்ற விபி ராஜன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், தான் கலைஞர் காலத்தில் இருந்து உழைத்து கொண்டிருக்கிறோம், கலைஞருக்கு பிறகு தளபதி காலத்தில் உழைத்து கொண்டிருக்கிறோம், தற்போது சின்னவரின் காலத்திலும் அவரிடம் நல்ல மதிப்பை பெற உழைத்து கொண்டிருக்கிறோம், எங்களுடைய விருப்பமும் குறிக்கோளும் கலைஞர் குடும்பம்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதே எங்கள் ஆசை, நாங்கள் கலைஞரின் அடிமைகள் என்று சொல்வோமே அதைப்போல, கலைஞரின் குடும்பத்திற்கு உழைக்கும் கொத்தடிமை என்று பெருமிதத்தோடு கூறினார். இந்த காணொளியை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.