பாலியல் சீண்டல்கள் குறித்து கல்லூரி மாணவிகளிடம் இருந்து நிறைய புகார்கள் வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் தெரியாதபடி இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பாக விருட்சம், அரசு பள்ளிகளில் மியா வாக்கி அடர் வனங்களை வளர்க்கும் திட்டத்தின் கீழ் கோவை சாய்பாபா காலனி டி.ஏ ராமலிங்கம் செட்டியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மரக் கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசும்போது :-
சென்னை மோட்டார் தொழிலில் அதிக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதற்கு இது போன்ற கார் ரேஸ் நடத்துவது வரவேற்கத்தக்கது தான் என்றார். ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், கார் ரேஸ் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிற மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர், விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார். ஓட்டு வங்கிக்காக மட்டுமே முதல்வர் வாழ்த்து கூறி இருப்பதாக கூறினார்.
ஜி.எஸ்.டி என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம் என்ற அவர், அதில் பிரச்சினை ஏற்படும் பொழுது, மத்திய அரசை மட்டுமே குற்றம் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றார்.
தொழில் நகரான கோவையின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை. அதனை பாதிக்கும் வகையில் அரசு செயல்பட்டால், பா.ஜ.க – வின் குரல் மக்களுக்காக என்றும் ஒலிக்கும் என தெரிவித்தார். பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருவதாகவும், இது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளே சாட்சி என்றார்.
கல்லூரி பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், குறிப்பாக அவர்களின் அடையாளம் தெரியாத வகையில், பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்.