உத்தரப்பிரதேச மாநிலம் ராய் பரேலி தொகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக சோனியா காந்தி எம்.பி.யாக செயல்பட்டு வந்துள்ளார். தற்போதைய தேர்தலில், அவர் அங்கு போட்டியிடாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை எதிர்த்து களமிறங்குகிறார். இந்நிலையில் ராய் பரேலி உள்ளிட்ட இடங்களில் அமித்ஷா நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
தினேஷ் பிரதாப் சிங்கிற்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொள்கையில் அவர் பேசியதாவது, “நீங்கள் காந்தி குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். ஆனால் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. இளவரசர் இங்கு வாக்கு கேட்க வந்துள்ளார். நீங்கள் பல ஆண்டுகளாக அவர்களுக்கு வாக்களித்து வருகிறீர்கள். எம்.பி. நிதியில் இருந்து எதையாவது பெற்றுள்ளீர்களா? அதைப் பெறவில்லை என்றால் அது எங்கே போனது? அது அவர்களின் வாக்குவங்கிக்கு சென்றது. சோனியா காந்தி தனது எம்பி நிதியில் 70%க்கும் மேல் சிறும்பான்மையினருக்கு செலவு செய்துள்ளார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் தருவதாக உறுதி அளிக்கிறார்கள். தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.15 ஆயிரம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ராய் பரேலி மக்கள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை வெற்றி பெற வைத்துள்ளனர். ஆனால் வெற்றி பெற்ற பின் எத்தனை முறை சோனியா மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர்?
பொது சிவில் சட்டம் மற்றும் முத்தலாக் குறித்து தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தெரிவிக்கவேண்டும்.
காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் பிரச்னையை 70 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்தன. கும்பாபிஷேக விழாவிற்கு சோனியா, ராகுல், அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ்விற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டன. ஆனால் தங்களது வாக்கு வங்கிக்கு பயந்து அவர்கள் போகவில்லை.
பாஜக வாக்குவங்கிக்கு அஞ்சவில்லை. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. முன்னர் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பன. ஆனால் தற்போது பாதுகாப்பு தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் இடஒதுக்கீடு முடிவுக்கு வந்துவிடும் என எதிர்க்கட்சிகள் கூறுவது பொய். கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பங்கைக் குறைத்து அதன் அரசாங்கங்கள் ஒரே இரவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. பாஜகவிற்கு ஒரு எம்.பி. இருக்கும்வரை எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.