மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற பா.ஜ.க.வினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதுடன், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேங்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கண்டித்து அம்மாநில தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து 7 ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தனர். திட்டமிட்டபடி நேற்று பேரணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இப்பேரணியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரி, எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி, கட்சியின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். இப்பேரணியை சந்தீப் சன்டிரகச்சி பகுதியில் இருந்து சுவந்து அதிகாரியும், கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் இருந்தும் திலீப் கோஷும் துவக்கி வைத்தனர். இதனிடையே, பேரணியை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க.வினர் பலரையும் போலீஸார் கைது செய்தனர். அதேபோல, சிறப்பு ரயிலில் ஏற வந்தவர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், போலீஸாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், பேரணியாக வந்த பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்துவதற்காக தலைமைச் செயலகம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், தடுப்புகளை மீறி பா.ஜ.க.வினர் முன்னேறினர். ஆகவே, கூட்டத்தைக் கலைப்பதற்காக, பா.ஜ.க.வினர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். பின்னர், பேரணிக்கு தலைமையேற்று வந்தவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.