ஜனாதிபதி திரௌபதி முர்முவின் தோற்றம் குறித்து விமர்சித்த மேற்குவங்க மாநில அமைச்சர் அகில் கிரியை கண்டித்து, மேற்குவங்கம் மற்றும் ஒடிஸாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு வெற்றிபெற்றார். இதையடுத்து, முர்மு பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் உதித்ராஜ் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பவே இருவரும் மன்னிப்புக் கேட்டனர். இந்த சூழலில், மேற்கு வங்க அமைச்சர் ஒருவர் பொதுக்கூட்ட மேடையில் ஜனாதிபதியின் உருவம் குறித்து சர்ச்சகைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். இதை கண்டித்துத்தான் மேற்குவங்கம் மற்றும் ஒடிஸாவிலுள்ள பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேற்குவங்க மாநில சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் துறை இணை அமைச்சராக இருப்பவர் அகில் கிரி. இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “நான் அழகாக இல்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வுமான சுவந்து அதிகாரி. நாம் மக்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. உங்கள் குடியரசுத் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்” என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நெட்டிசன்களும் அகில் கிரியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
பா.ஜ.க. சமூக வலைதளப் பிரிவு பொறுப்பு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், “மம்தா பானர்ஜியும், அவரது கட்சியும் எப்போதும் பழங்குடியின மக்களுக்கு எதிரானது. இதனால்தான், ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு அக்கட்சி ஆதரவளிக்கவில்லை. தற்போது அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருப்பது வெட்கக்கேடானது” என்று கூறியிருக்கிறார். அதேபோல, மேற்குவங்க மாநில பா.ஜ.க. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜனாதிபதி திரெளபதி முர்மு பற்றி ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் உதித்ராஜ் ஆகியோர் சர்ச்சையாக பேசினர். இருவரும் மன்னிப்பு கேட்டதுபோல் அகில் கிரியும் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.
இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகாய் டிவிட்டரில், “அகில் கிரியின் பேச்சு ஒரு பொறுப்பற்ற கருத்து. இது திரிணாமுல் காங்கிரஸின் கருத்து அல்ல. குடியரசுத் தலைவர் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரையும், அவரது பதவியையும் மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் டிவிட்டரில், “உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் குறித்து இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்கள் கூறப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தோற்றம் போன்றவற்றை பற்றிய இத்தகைய கருத்துக்கள் மிகவும் மோசமான ரசனையில் உள்ளன. இது திரிணாமுல் காங்கிரஸின் உள்ளடக்கிய அரசியலை நிச்சயமாக பிரதிபலிக்காது” என்று பதிவிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்கு தனது சொந்த கட்சியே எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அகில் கிரி மன்னிப்புக் கேட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் மாண்புமிகு குடியரசுத் தலைவரை அவமரியாதை செய்ய நினைக்கவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் என்னை வார்த்தைகளால் தாக்கியதற்கு நான் பதிலளித்தேன். ஒவ்வொரு நாளும் என் தோற்றத்திற்காக நான் வார்த்தைகளால் தாக்கப்படுகிறேன். நான் குடியரசு தலைவரை அவமரியாதை செய்ததாக யாராவது நினைத்தால் அது தவறு. அப்படி ஒரு கருத்தை கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டின் குடியரசுத் தலைவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்று கூறியிருக்கிறார். எனினும், பழங்குடி சமூகத்தினர் சமாதானமடையவில்லை. அகில் கிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேற்குவங்கம் மற்றும் ஒடிஸாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, அகில் கிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையத்துக்கு பா.ஜ.க. கடிதம் அனுப்பி இருக்கிறது.