மகரிஷி வரஹானேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர் எனும் பல்கலை சக்கரவர்த்தி
பல்கலை வித்தகர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். சில பல்கலை மன்னர்கள் பற்றியும் கேட்டிருப்போம். இவ்வுலகில் பல்கலை சக்ரவர்த்திகள் உண்டா? அது சாத்தியமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. அதுவும் ஒரு தமிழர், அக்மார்க் தமிழர் என்று கூறலாம். ஆம், அவர் தேதிகளைக்கூட தமிழில்தான் கூறுவாராம், எழுதுவாராம்.
மகரிஷி வரஹானேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர்
அப்படி என்னதான் செய்தார் வரஹானேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர்?
அவர் ஒரு புரட்சியாளர், இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரித்த திலகர் வழிவந்தவர். பின்னொருகாலத்தில் காந்தியால் ஈர்க்கப்பட்ட மிகப்பெரிய அஹிம்சாவாதி, பன்மொழி வித்தகர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், உடற்பயிற்சியின் மேல் ஆர்வமுள்ளவர், துப்பாக்கி சுடுவதில் சூரர், சதுரங்கத்தில் சாதூர்யர், பேச்சாளர், பள்ளி ஆசிரியர், பள்ளித்தாளாளர், பங்குச்சந்தை விற்பன்னர், வானியலாளர், விவசாயி, மேற்கத்திய இசை விரும்பி, மேல்நாட்டு நடன மாணாக்கன், தமிழ் ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி, ஒரு மகரிஷி. இவரை நாம் தமிழ் சிறுகதைகளின் பிதாமகர் என்றும் போற்றுகிறோம்.
இப்படி பல்கலை சக்ரவர்த்தியாக மிளிர்ந்த ஐயர் அவர்கள் திருச்சிக்கு அருகே உள்ள வரஹானேரி கிராமத்தில் ஏப்ரல் 2, 1881அன்று பிறந்தார். தந்தை ஸ்ரீ வெங்கடேச ஐயர் வங்கித் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் திருச்சிராப்பள்ளி வர்த்தக சங்கம் உருவாகக் காரணகர்த்தா. அதில் இவர் இயக்குனராகவும் இருந்துவந்தார். தாய் ஸ்ரீமதி காமாக்ஷி அவர்கள்.
மணி மிகச் சுட்டிப்பையன், மிகுந்த அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தியுள்ளவன், மிகுந்த ஞானவான். சிறுவயதிலேயே கம்பன், காளிதாசன், விர்ஜில், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஸ்பென்சர், ஹக்ஸ்லி, எமர்சன் என்று கரைத்துக்குடித்தவன். சிறந்த சதுரங்க விற்பன்னன். மாகாணத்தில் ஐந்தாவது மாணவனாக மெட்ரிகுலேஷன் தேர்வடைந்த ஐயர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் இளம்கலை – வரலாறு, பொருளாதாரம், லத்தீன் பாட வகுப்பில் சேர்ந்தார். இங்கும் பல பரிசுகளும், உதவித்தொகையும் பெற்றது மட்டுமில்லாது லத்தீனில் முதல் மாணவனாக இளம்கலை பட்டம் பெற்றார்.
கல்லூரிப் படிப்பை முடித்த ஐயர், சென்னையில் சட்டக்கல்வி பயின்று பிளீடர் உரிமம் பெற்றார். திருச்சி நீதிமன்றத்தில் முதல் தர ப்ளீடராக தன் சட்ட வாழ்க்கையை துவக்கினார். நல்ல வேலை, நிறைய சம்பளம், அதற்கு மேல் அவர் மனதிற்கு பிடித்த பிற விஷயங்கள் செய்ய போதிய நேரம் என்று ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது. இங்கிலாந்து மற்றும் ஹாலந்தில் இருந்து வெளிவரும் சதுரங்கப் பத்திரிக்கையில் வரும் புதிர்களுக்கு விடைகண்டு பத்திரிக்கைகளுக்கு எழுதுதல், வானிலை ஆய்வு செய்தல், பலவிதமான புத்தகங்களை தருவித்து படித்தல் என்று இன்ன பிற விஷயங்களிலும் திளைத்தார் ஐயர். சிறிது நாட்களில் அவரது தந்தை துவங்கிய திருச்சிராப்பள்ளி வர்த்தக சபையின் இயக்குனராக பொறுப்பேற்றார்.
காற்றுக்கென்ன வேலி என்பது போல், ஐயருக்கு இந்த இதமான வாழ்க்கை விரைவாய் சலித்துப்போயிற்று. இந்த சமயம் அவருக்கும் ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மிக்கும் திருமணம் நடந்தேறி இருந்தது. அம்மையாரின் சொந்தக்காரர், பசுபதி ஐயர், ரங்கூன், பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரியில் மிகப்பெரிய ஜவுளி வியாபாரி. ரங்கூனில் பசுபதி ஐயரின் ஆங்கிலேய பாரிஸ்டர் நண்பர் ஒரு நம்பகமான தமிழ் தெரிந்த வழக்கறிஞரை தேடிக்கொண்டிருந்தார். பழம் நழுவி பாலில் விழுந்தது, ஐயர் ரங்கூன் பயணமானார்.
மிகச்சில நாட்களிலேயே ஐயர் தன் பாரிஸ்டரின் அன்புக்குப் பாத்திரமானார். ஒருநாள் பாரிஸ்டர் பசுபதி ஐயரிடம், வ வே சு ஐயரை லண்டனுக்கு அனுப்பி பாரிஸ்டருக்கு படிக்கவைப்பது உசிதம் என்று கூறினார். பசுபதி ஐயர் இந்த சமயத்தில் லண்டன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதை பராமரித்து வளர்க்க ஒரு நம்பகமான நபரை தேடிக்கொண்டிருந்தார். மீண்டும் பழம் நழுவி பாலில் விழுந்தது, ஐயர் லண்டன் பயணப்பட்டார்.
தொப்பி, டை, கோட் சூட், பூட்ஸ் என ஒரு மேலைநாட்டு துரை போல் ஆடை, கம்பீரமான உருவம் என நம் வரஹானேரி துரை, லண்டன் லிங்க்கன்ஸ் இன் சட்டக்கல்லூரியில் பாரிஸ்டர் படிப்பை துவங்கினார். இங்கிருந்து நம் வாரகனேரி துரை ஐயர், மகரிஷி ஐயராக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஐயரின் நாக்கு இந்திய உணவுக்காக ஏங்கியது, அதுசமயம் லண்டனில் நம் நாட்டு மாணாக்கர் தங்கி படிக்க இந்தியா ஹவுஸ் என்று ஒரு விடுதி இருந்தது. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா எனும் ஒரு இந்திய கணவானுக்கு சொந்தமான இந்தியா ஹவுஸ் லண்டனில் மிகப்பிரபலம். ஷ்யாம்ஜி ஒரு மிகப்பெரிய நாட்டுப்பற்றாளர், போராளி, பாரிஸ்டர், சமூகவியலாளர், பத்திரிக்கை அதிபர் என்று பன்முகம் கொண்ட கனவான். இந்திய மாணவர் இருவரை தேர்ந்தேடுத்து குரு கோபிந்த் சிங் மற்றும் வீர சிவாஜி பெயரில் உதவித்தொகை அளித்து இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மிகப்பெரியவர் ஷாம்ஜி.
65, க்ராம்வெல் ரோடு, ஹை கேட் லண்டன் – வரஹானேரி மேல்நாட்டு துரையை, மகரிஷி ஐயராக புடம் போட்ட புண்ணியஸ்தலம். ஒரு மழைக்கால மதியத்தில் இந்தியா ஹவுசின் கதவைத் தட்டினார் ஐயர். அங்கு வேலை செய்த சீமாட்டியிடம் தன் சிறிய அறிமுக அட்டையை அளித்து தான் இங்கு தங்க இடம் தேடி வந்ததாகக் கூறினார். இந்த சமயத்தில் இந்தியா ஹவுஸை பராமரித்து நடத்திக்கொண்டிருந்தது லண்டனில் சட்டம் படிக்கவந்த இன்னொரு மாணவன். ஒரு நெடுங்கம்பு போல் ஒடிசலான தேகம், கூர்மையான பார்வை, நிமிர்ந்த நன்னடை என்று வந்த அந்த மாணவனிடம், “ஹல்லோ, ஐ ஆம் வி வி எஸ் ஐயர்.” என்று அறிமுகம் செய்துகொண்டார் மேல்நாட்டு கணவான் போல் உடையணிந்த நம் ஐயர். அவர் அறிமுகம் செய்துகொண்டது ஸ்வதந்திர வீர் விநாயக் தாமோதர் சாவர்க்கார் அவர்களிடம். இந்த சந்திப்பைப் பற்றி சாவர்க்கார் அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
“1907 என்று நினைக்கிறேன், ஒருநாள் மதியம் இந்தியா ஹவுசில் வேலை செய்யும் சீமாட்டி ஒரு சிறிய அறிமுக அட்டையை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தாள். அச்சமயம் நாங்கள் கீழ்த்தளத்திற்கு உணவுக்காக வந்துகொண்டிருந்தோம். அந்த நபர் வரவேற்பு அறையில் என்னைக் காண காத்திருப்பதாகக் கூறினாள். வரவேற்பறை கதவு திறந்தவுடன் ஒரு மேல்நாட்டு கணவான் போல் மிடுக்கான உடை அணிந்த ஒருவர் புன்சிரிப்புடன் கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டார். மேலும் தான் மேல்நாட்டு சங்கீதம் மற்றும் பால் ரூம் நடனம் கற்க ஆசைப்படுவதாகவும் கூறினார். என் வழக்கப்படி இப்படியா நீங்கள் உங்கள் இளமையை வீணாக்கப்போகிறீர்கள்? நம் நாட்டிற்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் நிறைய இருக்கும் பொழுது இப்படி செய்யலாமா என்று அன்பாகக் கடிந்து கொண்டேன். நான் கூறியது அவருக்கு திருப்திகரமாக இருந்ததாகத் தெரியவில்லை, புன்முறுவலுடன் பின்னர் வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டார். அவர் தான் ஸ்ரீயுத் வி வி எஸ் ஐயர்.”
சாவர்க்காருடனான இந்த முதல் சந்திப்பு ஐயரின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடில்லாமல் அவர்களிடையே மிக ஆழமான நட்பிற்கும் ஒரு பிள்ளையார் சுழியிட்டது. ஐயர் இந்தியா ஹவுசில் வந்து ஐக்கியம் ஆக இந்த முதல் சந்திப்பில் இருந்து வெகு நாள் ஆகவில்லை.
மகரிஷி ஐயர் பற்றி பாரத நாட்டவர் யாவரும் மறக்கக்கூடாத பத்து விஷயங்கள் இதோ உங்கள் பார்வைக்கு.
- மாவீரன் மதன் லால் திங்க்ரா மற்றும் வீர வாஞ்சிநாதன் – இந்த இருவரும் ஐயரின் மாணாக்கர்கள். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் மற்றும் பிரிட்டிஷாரின் கடுமையான விசாரணையை எப்படி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் எதிர்கொள்வது என்பது பற்றி கற்றுக்கொடுத்தவர் நம் ஐயர்.
- அந்தக்காலத்திலேயே, போராட்ட டூல் கிட் தயார் செய்தவர் அவர். லண்டன் வந்த சமயத்தில் ஒரு டைரி வாங்கினார் அவர் (அக்டோபர் 10, 1907). அதில் ஒரு பக்கத்தில் போராட்டத்தில் என்ன கோஷம் எழுப்பவேண்டும் என்று முறையாகப் பதிவுசெய்திருந்தார். இதற்கு “இந்திய தேசிய கோஷம்”1 என்று பெயரிட்டிருந்தார்.
- லிங்க்கன்ஸ் இன் சட்டக்கல்லூரியில் ரோமன் லா எனப்படும் சட்ட பிரிவில் முதல் மாணவனாகத் தேறினார் ஐயர். அக்காலத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து மன்னனின் ஆட்சிக்கு உட்பட்டு, ஆங்கில சாசனத்துக்கு பணிகிறேன் என்று உறுதிமொழி ஏற்கவேண்டும் என்ற ஒரு முறை இருந்தது. பட்டமளிப்பு விழா அன்று நான் இதைச் செய்யமாட்டேன், எனக்கு உங்கள் பாரிஸ்டர் பட்டம் தேவையில்லை என்று கர்ஜித்தது வெளிநடப்பு செய்தார் ஐயர்.
- மாவீரன் மதன் லால் திங்க்ரா, கர்சன் வாலியை சுட்டுக்கொன்றதற்கு எதிராக தீர்மானம் இயற்றுவதற்காக லண்டனில் ஆகா கான் தலைமையில் இந்தியர்கள் கூடினர். தீர்மானம் முன்மொழியப்பட்டு, ஆகா கான் அது ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார். அச்சமயம் அந்த சபையின் ஒரு மூலயில் இருந்து எழும்பிய ஒரு கம்பீரமான குரல், “இல்லை, நான் அதை ஆதரிக்கவில்லை” என்று கூறியது. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு யார் அவன், அடி அவனை என்று கூக்குரல் இட ஆரம்பித்தார்கள் ஒருசாரார். குரல் எழுப்பிய வீர சாவர்க்காரரின் முகத்தில் ஒரு குத்து விட்டான் பால்மர் என்னும் ஒரு ஆள். சாவர்க்காரின் அருகில் இருந்த ஆச்சார்யா, பால்மரை அடித்து துவைத்த சமயத்தில், நம் ஐயர் அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். சாவர்க்கார் வேண்டாம் என்று கண் சிமிட்ட, அடங்கிப்போனார் நம் சிங்கம், ஐயர் அவர்கள்.
- பிரான்ஸ் நாட்டு மார்சயில் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்தது சாவர்க்காரை இந்தியாவிற்கு கைது செய்து அழைத்துச் செல்லும் கப்பல். சாவர்க்கார் தப்பியவுடன் அவரை பாதுகாப்பாக மீட்டுச்செல்ல காத்திருந்த மூவரில் ஒருவர் நம் மகரிஷி ஐயர். துரதிஷ்டவசமாக சாவர்க்காரை பிடித்த பிரான்ஸ் நாட்டு காவல்துறை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்துவிட்டனர். பின்னர் பாரிஸ் நகரின் நீதிமன்றத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், பிரிட்டிஷ் அரசுக்கு பயந்தே பிரான்ஸ் நாடு இவ்வழக்கை கோட்டைவிட்டது என்று செய்தி வந்தது.
- மகரிஷி ஐயர் 1910-ல் பாரிஸிலிருந்து பாண்டிச்சேரிக்கு தப்பி வந்த விதம் உலகத்தையே வியந்து மூக்கில் கையயை வைக்கவைத்த தருணம். முதலில் ருஸ்தம் சேத் எனும் பார்சி வியாபாரியாய் வேடம் பின்னர் ஒரு இஸ்லாமிய பக்கீர் வேடம், பின் ஒரு இஸ்லாமிய வியாபாரி வேடத்தில் பயணம் என்று பலவேடம் பூண்டு இங்கிலாந்து ரகசிய போலீசிற்கு தண்ணிகாட்டினார். பாரிஸிலிருந்து இந்தியாவிற்கு நேர்வழியாக வரமால், உலகைச்சுற்றி பாண்டிச்சேரி தொட்டார் ஐயர். இத்தாலியின் ரோம் நகர், துருக்கியின் கான்ஸ்டான்டிநோபிள், எகிப்தின் கைரோ, பம்பாய், கொழும்பு வழி கடலுர் வந்து சேர்ந்து, அங்கிருந்து ஒரு மாட்டுவண்டியில் பாண்டிச்சேரி அடைந்தார். பிறகு பாண்டிச்சேரியில் பத்து ஆண்டுகள் வசித்தார் நம் ஐயர்.
- அக்காலத்தில் ஸ்வதேசிகளின் கூடாரமாய் இருந்தது பிரெஞ்சு பாண்டிச்சேரி. ஸ்ரீ அரவிந்தர், மஹாகவி பாரதியார், பரளி நெல்லையப்ப பிள்ளை, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சார்யா, ஹரிஹர சர்மா என்று ஒரு பேரும் படையே பாண்டிச்சேரியில் மய்யம் கொண்டிருந்தது. இங்கு தான், பாரிஸில் மேடம் காமா கொடுத்த பிரவுனிங் கைத்துப்பாக்கி கொண்டு வீர வாஞ்சிக்கு பயிற்சியளித்தார் ஐயர். இன்றும், பலருக்கு ஐயரை ஏன் ஆங்கிலேய அரசு “திருநெல்வேலி சதி” வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை என்பது ஒரு புரியாத புதிர்.
- நவீன தமிழ் சிறுகதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் ஐயர். அவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் (1917) மிகப்பிரபலம். ஐயர் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. திருக்குறளை ஆங்கிலத்தில் Tirukkural – The Kural or The Maxims of Thiruvalluvar என மொழிபெயர்த்து, அவர் எழுதிய கம்பராமாயணத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் உரை, Kambaramayanam – A Study ஆகியவை இன்றும் பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன.
- ஐயர், காந்திஜி அவர்களை 1917-ல் இரண்டாவது முறையாக பாண்டிச்சேரியில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப்பின் அஹிம்சாவாதியாக மாறிப்போனார் ஐயர். தன் கடேசி மூச்சுவரை காந்திஜியை, சத்தியவான், தேஜஸ்வி என்று போற்றிப் புகழ்ந்தார் ஐயர்.
- மகரிஷி ஐயர் ஒரு சமூக சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய உண்மைப் பெரியோரில் ஒருவர். அவர் சேரன்மஹாதேவியில் துவங்கிய பாரத்வாஜ ஆஸ்ரமம், ஒரு பிரிவினையில்லா சமூகத்தை உருவாக்க அவர் இட்ட பிள்ளையார் சுழி. ஐயரின் பிரிவினையில்லா சமூகத்தின் மூலம் – சீக்கியரின் கால்ஸா பந்த் (வழி). சீக்கிய குரு கோவிந்த சிங், ஐயரின் ஆத்ம, ஆதர்ச புருஷர். ஒரு சாதிமீதான வன்மத்தால் எப்படி காங்கிரசில் ஒரு சாரார் ஐயருக்கு எதிராக விஷத்தை கக்கினார்கள் என்பது ஒரு தனிக்கதை. ஈ வெ ராமசாமி நாயக்கர், சேலம் வரதராஜுலு நாயுடு மற்றும் திரு வி க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பொய் பிரச்சாரம், பின்னாளில் பாரத்வாஜ ஆஸ்ரமத்தின் சொத்துக்களை கைப்பற்றவேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் வந்து நின்றது. காந்திஜி இவர்கள் பிரச்சாரம் பொய்க்கும் வண்ணம் “யங் இந்தியா” பத்திரிக்கையில், சமபந்தி போஜனம் பற்றி எழுதிய கட்டுரைக்கு பின்னும், இவர்களின் பிராமண வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்தது. இந்த பொய் பிரச்சாரங்களும், ஐயரின் திடீர் மறைவும், அவர் பிற்காலத்தில் ஒரு தக்ஷசீலம், நாளந்தா, ஷாந்தினிகேதன் போல ஒரு மிகப்பெரிய கல்விப்புரட்சி கொண்டுவரப்போகும் இடம் என்று நம்பி நிர்மாணித்த பாரத்வாஜ ஆஸ்ரமத்தின் மூடுவிழாவின் துவக்கமாக அமைந்தது2.
“பேச்சுக்கு சிதம்பரம் பிள்ளை, பாட்டுக்கு பாரதியார், எழுத்துக்கு ஐயர். இம்மூவரும் தமிழ்நாட்டின் மும்மணிகள். பாரதத்தாயின் வீரத் திரிசூலங்கள்.” என்று கூறுவார்கள்.
ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கார் போல் ஐயரின் சிறப்புக்களும் சில விஷம சக்திகளின் செயலால் மக்களுக்கு தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல், அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் பொய் பிரச்சாரம் இன்றுவரை செய்யப்பட்டு வருகிறது. ஐயர் அகால மரணம் அடையாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் பற்றிய பொய் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பார், பாரத்வாஜ ஆஸ்ரமம் ஆல்போல் தழைத்து ஒரு சீரிய தமிழகம் உருவாக அச்சாணியாய் இருந்திருக்கும். இன்று விதைக்கப்படும் விஷ விதைகளாம் – ஹிந்து விரோதம், சமூகங்களிடையே பகையைத் தூண்டும் சிந்தனைகள், போதைக்கு அடிமையாவதை பழமை வாதத்திற்கு எதிரான புரட்சி என கொண்டாடும் எண்ணம் போன்ற பல அவலங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
ஜூன் 2, 1925 அன்று ஐயர்3 மறைந்த பொழுது காவியக்கண்ட கணபதி சாஸ்திரிகள் அவர்கள் குவலயானந்தாவிலிருந்து ஒரு சமஸ்க்ருத ஸ்லோகத்தை மேற்கொள் காட்டி எழுதிய அஞ்சலி உங்கள் பார்வைக்கு
रात्रिर्गमिष्यति भविष्यति सुप्रभातम् भास्वानुदेष्यति हसिष्यति पङ्कजश्रीः ।
इत्थं विचिन्तयति कोशगते द्विरेफे हा हन्त हन्त नलिनीं गज उज्जहार ॥
- कुवलयानन्द
“இந்த இரவும் கடந்து போகும், காலை வரும், கதிரவன் எழுவான், இந்தத் தாமரை மலரும்” என்று அந்தத் தாமரை மொட்டில் சிறைப்பட்டிருந்த சிறு வண்டு நினைத்திருக்கயில். அந்தோ பரிதாபம், மொட்டை பிடுங்கி எறிந்தது ஒரு யானை.”
ஐயர் அவர்களைப் பற்றி கற்றறிந்து கொள்வது, அவர் படைத்த காவியங்களை படிப்பது, அவர் தமிழுக்கு தன்னலமில்லாமல் ஆற்றிய தொண்டுகளையும், அவர் நம் பாரதத்திற்கும், தர்மத்திற்கும் செய்த தியாகங்களையும் போற்றுவது மட்டுமே நாம் இன்று அவருக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும்.
மகரிஷி ஐயர் அவர்களை பற்றி பேசும் பொழுது அவர் மனைவி ஸ்ரீமதி பாக்கியலட்சுமி அவர்களை பற்றி சொல்லாமலிருக்க முடியாது. அன்னார், ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் மறுபிறப்பாக இருந்திருக்கலாம் என்று சிந்திக்க தோன்றும் நாம் அவர் செய்த தியாகங்களைப் பற்றி படிக்கும் பொழுது. கைக்குழந்தையுடன் ஒரு இளம் பெண், சர்வ வல்லமைமிக்க ஆங்கில ரகசிய போலீஸின் கண்காணிப்பில், அவ்வப்போது அவர்களால் மிரட்டப்பட்டு வந்தால் என்ன ஆவாள்? இந்த நிலையில் அவளது கைக்குழந்தை அகல மரணம் அடைந்தால் அவள் மனநிலை எப்படி இருக்கும்? எதற்கும் அஞ்சா தைரிய லட்சுமி நம் பாக்கியலட்சுமி அம்மாள். ஐயர் வருவார், எல்லாம் நன்மைக்கே என்று காத்திருந்தாள் இந்த தைரிய லட்சுமி. ஐயர் வந்தார், இதோ நல்ல நாட்களும் வந்துகொண்டேயிருக்கின்றன என்று எதிர்பார்த்திருந்தவள் மீது இரு பேரிடி விழுந்தது, ஐயர் மற்றும் அவர்களின் அன்பு மகள் சுபத்திரா, ஆகிய இருவரின் அகல மரணம். இந்தப் பேரிடியயும் தாங்கிய பாக்கியலட்சுமி அம்மாள், காந்திஜி கண்ட ஒத்துழையாமை இயக்கத்திலும், இன்ன பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சுதந்திர பாரதத்தில், தனது 73-வது வயதில் மறைந்தார்.
மகரிஷி ஐயருக்கென்றே, தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் எழுதிவைத்து போல் ஒரு குறள் உண்டு.
அதிகாரம் 27, தவம், குறள் 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
ஒரு மாற்றத்துக்காக ஐயர் அவர்கள் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டும் இங்கே கொடுக்கிறேன். இந்தக் குறளின் தமிழ் அர்த்தத்தை தயைகூர்ந்து தேடிப்படியுங்கள். மகரிஷி ஐயர் புகழ் போற்றுங்கள்.
The translation from Aiyar’s The Kural or The Maxims of Thiruvalluvar
The fiercer the fire in which it is melted the more brilliant becometh the lustre of gold: even so the severer the sufferings endured by the austere, the purer their nature shineth.
Reference
1லண்டனில் இருக்கும் பொழுது இந்தி மொழியில் மகரிஷி ஐயர் கண்ட”இந்திய தேசிய கோஷம்” ஹிந்து ஹிந்து ஹிந்துஸ்தான் (3 முறை), ஹிந்துஸ்தான் (மெதுவாக), ஆலீஷான், பதா ஹை நிஷான், ஷான் – ஷான் – ஷான், தேரி ஹிந்துஸ்தான்
2இன்று ராமகிருஷ்ண மடத்தாரால் மீண்டும் உயிரூட்டப்பட்டு அது சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
3ஐயர் அகல மரணம் அடைந்த பொழுது அவருக்கு வயது, வெறும் நாற்பத்தி நான்கு
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதி, வீர விளக்கு வ வே சு ஐயர் 4-வது பதிப்பு (2013), அல்லியன்ஸ் பதிப்பகம்
டாக்டர் வ வே சு கிருஷ்ணமூர்த்தி, புரட்சி வீரர் பாரிஸ்டர் மகரிஷி வ வே சு ஐயர், 75-வது இந்திய விடுதலை வெளியீடு (2022), பாரதி இலக்கிய பயிலகம். பாரதி இயக்கம், திருவையாறு
இலந்தை சு ராமசாமி, வ வே சு ஐயர் – ஒரு வாழ்க்கை, 1-வது பதிப்பு (2007), கிழக்கு பதிப்பகம்
இர அ பத்மநாபன், வ வே சு ஐயர் (ஆங்கிலம்), (1980), நேஷனல் புக் டிரஸ்ட், புதுடில்லி
ரகமி, வீர வாஞ்சி, 75-வது இந்திய விடுதலை வெளியீடு (2022), பாரதி நூலகம், தேப்பெருமாள் நல்லூர்
_Article by Raja Baradwaj