சொந்த கட்சிக்குள்ளே பாலியல் புகார்கள் பற்றி ஏறிய, வெளிநாட்டிற்கு சென்று “பெண்ணுரிமை” பற்றி வாய் வலிக்க ராகுல் காந்தி பேசுவதாக கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
“காங்கிரசில் உடல் மற்றும் தோலை வைத்து தான் தேர்தலில் பெண்களுக்கு வேட்பாளர் சீட்டுகள் வழங்கப்படுகின்றன” என்ற பகிரங்க குற்றச்சாட்டால், நாட்டு மக்களை அதிர வைத்துள்ளார் ஹரியானாவில் இரண்டு முறை காங்கிரஸ் MLA- வாக இருந்த திருமதி. சாரதா ரத்தோர் அவர்கள்.
சில தினங்களுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த மூத்த பெண் தலைவரான திருமதி. சிமி ரோஸ் பெல் அவர்களும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே “Casting Couch” என்ற பாலியல் கொடுமை நடைபெறுவதாக குற்றம் சாட்டியதும், அதன்பின் அவர் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.
இவ்வாறு, உங்கள் சொந்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் பாலியல் புகார்கள் பற்றி ஏறிய, வெளிநாட்டிற்கு சென்று “பெண்ணுரிமை” பற்றி வாய் வலிக்க பேசும் திரு.ராகுல் காந்தி அவர்களே,
வெளி நாடுகளுக்கு சென்று இந்தியாவை பற்றியும் இந்தியர்களை பற்றியும் தவறாக சித்தரிக்கும் நீங்கள், உங்கள் கட்சிக்குள் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
பெண்களின் உடல் அழகைப் பார்த்து தேர்தல்களில் சீட்டு வழங்கும் உங்கள் கட்சிக்கு, “பெண்களின் பாதுகாப்பு” பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
பாலியல் கொடுமையை மூடி மறைப்பதும், மீறி வாய் திறந்தால், உடனே கட்சியை விட்டு நீக்குவதும் தான் உங்கள் பாரம்பரிய கொள்கையா?
பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும்” என்று பெண் அடிமைத்தனத்தை பொதுவில் பறைசாற்றிய தமிழக காங்கிரஸ் MLA-வான திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உங்களால் எப்படி உறுதிசெய்ய முடியும்?
இதனால் தான் உங்கள் கட்சியில், உங்கள் குடும்ப பெண்களைத் தவிர வேறு எந்தப் பெண்களுக்கும் மிகப்பெரிய அதிகாரப் பொறுப்பும் பதவியும் இதுவரை வழங்கப்படவில்லையோ?
எனவே, ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு, முதலில் உங்கள் கட்சிக்குள்ளேயே நடக்கும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களையும், பெண்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்களையும் கண்டித்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.