சட்டம் ஒழுங்குகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய காவல்துறையினர் குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல, ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அமமுக தலைவர் டி.டி.வி தினகரன். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச்சம்பவங்கள் – குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவல்துறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது ?
சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர், செங்கல் சூளை தொழிலாளி மற்றும் குரோம்பேட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் என நேற்று ஒரே இரவில் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை, நுங்கம்பாக்கத்தில் திரைப்பட புகைப்பட கலைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு செல்போன் பறிப்பு என வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்லாது எங்கு பார்த்தாலும் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுவே மூன்றாண்டு கால திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு சிறந்த உதாரணம்.
சட்டம் ஒழுங்குகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய காவல்துறையோ, குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல, ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டுவருவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காவல்துறையை இப்பொழுதாவது தட்டியெழுப்பி தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.