சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் சிதிலமடைந்த சாலைகளை தங்கள் சொந்த பணத்தை கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூரில் உள்ள இபி சாலை கடந்த 16 வருடங்களாக குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதாகவும் இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு பெண்களிடமும் பணம் திரட்டி 15 ஆயிரம் கொண்டு பெண்களே கான்கிரிட் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கூறியதாவது :-
இன்றைக்கு வந்து ரோடு போடும் போராட்டம் என்பதை அறிவித்து மக்களிடம் நிதி திரட்டி பெண்களே இன்று காலையில் இருந்து சாலை அமைக்கும் பணியை துவக்கி இருக்கிறோம். கிட்டத்தட்ட 7 மணியிலிருந்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து இப்பணியை செய்து வருகிறோம். ஆனால் தற்போது வரை இந்த நகராட்சியின் கமிஷனர் நேரில் வந்து என்ன பிரச்சனை என்று பார்க்கவில்லை கேட்கவில்லை. பெண்கள் வந்து இங்கே ரோடு போட்டுட்டுஇருக்கோம், கொஞ்சம் கூட அரசுக்கு வெக்கமாக இல்லையா ? ரோடு போடறது சாதாரணமான விஷயம் இல்ல. ஆனா இதுக்காக அரசு நிதி ஒதுக்கி இருக்கும். ஆனா அந்த நிதி எல்லாம் எங்க போயிருக்கும்னு என்பது தான் எங்க கேள்வி. கிட்டத்தட்ட 15 வருஷமா இந்த சாலை இப்படித்தான் குண்டும் குழியுமா மோசமா இருக்கு. கடந்த வாரம் ஒரு கர்ப்பிணி பெண் இவ்வழியில் சென்ற போது கீழே விழுந்து வலிப்பு வந்துள்ளது. பல குழந்தைகளுக்கு இங்கு விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் இங்க தொடர் கதையா இருக்கு. காலையிலிருந்து சாலை போடக்கூடிய எங்களின் குறைகளை தமிழக அரசு கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண்மணி கூறினார்.