தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40% கமிஷன் வழங்க வேண்டும், முதலமைச்சரின் குடும்ப ஆடிட்டரைச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில், கோவையில் செமி கண்டக்டர்கள் தயாரிப்பது குறித்து குறிப்பிட்டதற்குப் பிறகே, கோவை குறித்து ஞாபகம் வந்திருக்கிறது.
தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40% கமிஷன் வழங்க வேண்டும், முதலமைச்சர் மருமகனைச் சென்று நள்ளிரவில் சந்திக்க வேண்டும், முதலமைச்சரின் குடும்ப ஆடிட்டரைச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்? தங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கும் மாநிலங்களில்தான், முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வருவார்கள்.
தங்கள் மீது முழுத் தவறையும் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க வேண்டாம் திரு.ஸ்டாலின் அவர்களே. கோவை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களுக்கும், தொழில்துறையில் திமுக செய்து வரும் துரோகங்களை, ஜூன் 4 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக நிச்சயம் சரிசெய்யும். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையை மீட்டெடுப்பதே எங்கள் முதல் பணியாக இருக்கும்.