ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தின் கூட்டு களவாணியான பெண் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பள்ளி சிறுமிகளையும் ஈடுபடுத்தி சீரழித்ததாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
கருக்கா வினோத் – ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய நபர். இந்த குண்டு வீச்சு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிற நிலையில், கருக்கா வினோத்திற்கு நெருக்கமான 37 வயதான ஒரு பெண் குறித்த தகவலறிந்து அந்த பெண்ணின் வீட்டில் சோதனையிடும் போது கண்டெடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததும், மேலும் பலரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்ததை தொடர்ந்து மாநில விபசார தடுப்பு பிரிவுக்கு தகவல் அளித்தது.
இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத்தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்து சென்று கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. மேலும் அந்த குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏற்கனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இது வரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது. அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அறிந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம்.
யாரை குறை சொல்ல முடியும்? பெற்றோரையா? ஆசிரியர்களையா? அரசையா?
நாம் நம்மைத் தான், நம் சமுதாயத்தைத் தான் நொந்து கொள்ள வேண்டும்.
நடந்துள்ளது மிகப் பெரிய கொடுமை. சமுதாய அவலம். இதை மாற்றி, திருத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்முடையது! இவ்வாறு குறியிட்டுள்ளார்.