சமீபத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என பேசினார். இதற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “நாங்க எல்லோரும் ராம பக்தர்கள் தான், நாங்கள் எப்படி ராமர் கோவிலை இடிப்போம்” நாங்கள் நாமமும் போடும் பட்டையும் போடுவோம். இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டைம்ஸ் நவ் ஊடகம் ஒன்றில் நிருபர் ஒருவர் ஸ்ரீ ராமரை பற்றி கேட்ட கேள்விக்கு காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி, பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் கரூர் எம்பி ஜோதிமணி, “நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். எனக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது. ஏனென்றால், நாங்கள் மூதாதையரை வழிபடும் முறையையே பின்பற்றி வருகிறோம். நீங்கள் தமிழ்நாட்டில் யாரிடம் வேண்டுமானாலும் போய் கேட்டுப் பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கும் ராமர் கோயிலைப் பார்க்க முடியாது.
நான் ஒவ்வொரு வாரமும் எங்கள் குடும்பத்தினர் வழிபடும் கோயிலுக்குச் செல்வேன். அது மூதாதையர் வழிபாடு. பல தெற்கு மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றுகின்றனர். நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் மூதாதையரையே கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர்.
நான் ராமாயணம், மகாபாரதம் படித்துள்ளேன். ஆனால் வழிபாடு என்று வரும் போது மூதாதையரையே நாங்கள் வழிபடுவோம்” என்று அவர் கூறினார். இந்த வீடியோவை பகிர்ந்து, பலரும் ஜோதிமணியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிலர் ராமரைத் தெரியாது என எப்படிச் சொல்ல முடியும். ராமேஸ்வரம், மதுராந்தகம் போன்ற ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளது ஜோதிமணிக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினர்.
ஹிந்துக்களுக்கு எதிராக இப்படிப் பேசும் இவர்கள் தான் , 2024 மக்களவை தேர்தல் சமயத்தில் ராமர் பெயரைச் சொல்லி வாக்கு கேட்பார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா கேரா, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். இவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு தனது பாட்டியுடன் சென்றுள்ளார். கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, அவருடைய வீட்டின் கதவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கொடியை ஒட்டியுள்ளார். ராமர் கோயிலுக்கு சென்று வந்தது தொடர்பான புகைப்படம், வீடியோவை என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதற்காக காங்கிரஸ் கட்சியினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி அவரை வெறுக்கத் தொடங்கியது. ஏன் ராமர் கோயிலுக்கு சென்றீர்கள் என கேள்வி மேல் கேள்வி எழுப்பி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். இதனை அடுத்து காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத், அயோத்தி ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டைக்கு போகவில்லை என்றால் ஹிந்து விரோத கட்சியாக காங்கிரஸ் ஆகிவிடுவோம் என்று தன் கருத்தை சொன்ன ஒரே காரணத்திற்காக அவரின் பதவியை பறித்தது காங்கிரஸ். இதுதான் இவர்கள் ராமரின் மேல் வைத்த பக்தியா ?
தேர்தல் வருவதற்கு முன்பு ராமரை யாரென்று தெரியாது சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் நாங்க தான் ராமர் பக்தர்கள் என்றும் சொல்வார்கள்.