தமிழ்நாடு அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும் எனவும் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்த அடிப்படையில் 812 பேரை போக்குவரத்து ஊழியர்களாக பணி நியமனம் செய்வதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தது.
மேலும், அரசு போக்குவரத்து கழகத்தின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே நேற்று ( 9-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் சாரைசாரையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதனால் அதற்கு சாதாரண பேருந்துகளை விட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மெத்தனமாக இருந்து வருகிறார் அமைச்சர் சிவசங்கர். முதல்வர் ஸ்டாலினும் இதனைப்பற்றி மூச்சு கூட விடாமல் மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இதே பிரச்சனை தொடர்ந்தது. அப்போது ஸ்டாலின், மக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சியாக இருந்தபோது மட்டும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் முட்டு கொடுத்துவிட்டு, தற்போது முதல்வராக இருக்கும் நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கையை மிக சுலபமாக நிறைவேற்றலாம். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அவர் 2017 ஆம் ஆண்டு பதிவிட்ட அந்த பதிவினை ட்ரோல் செய்து ஸ்டாலினை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.