தெலங்கானாவில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது என்று மாநில மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கவிதா குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாரத்ராஷ்டிர சமிதி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில் நேற்றுநடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் சட்டமேலவை உறுப்பினருமான கவிதா பேசியதாவது: தெலங்கானாவில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அவர்கள் சொன்ன காலக்கெடுவுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒருவர், சனாதன தர்மம் குறித்து விமர்சித்தபோது, அதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குரல் கொடுக்கவில்லை. திமுக அமைச்சரின் கருத்து, நாடுமுழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியது. அதே திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் எம்.பி., வட நாட்டிலிருந்து வேலை தேடிவரும் மக்களை அவமதிக்கும் வகையில் ஏற்கெனவே பேசியுள்ளார். இவ்வாறு பேசுவோரை கொண்ட திமுக,இண்டியா கூட்டணியில் உள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை குறித்தும் ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர் வாய் திறந்து பேசுவார். ஆதலால் அவரை ‘தேர்தல் காந்தி’ என அழைக்கலாம். நாடு முழுவதும் பாதயாத்திரை சென்ற ராகுல்காந்திக்கு நாட்டின் ஒருமைப்பாடு பற்றி தெரியாதது கவலை அளிக்கிறது. இந்துக்களை தரக்குறைவாக விமர்சிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். இந்துக்களை வெறுப்பது காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலேயே ஊறி உள்ளது. இவ்வாறு கவிதா பேசினார்.