தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு இணையாக பாஜக மூன்றாவது அணி அமைத்தது. கூட்டணியில், பா.ம.க., – அ.ம.மு.க., – அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு இயக்கம், புதிய நீதி கட்சி – ஐ.ஜே.கே., – த.ம.மு.க., – இ.ம.க.மு.க., ஆகிய கட்சிகள் இருந்தன. இதுதவிர, சிறிய கட்சிகள், சமூக அமைப்புகள் என மொத்தம், 125 இயக்கங்கள் ஆதரவு அளித்தன.
மொத்தம், 19 தொகுதிகளில் பா.ஜ.க வும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில், கூட்டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மற்ற கூட்டணி கட்சிகள், தங்களின் கட்சி சின்னத்திலும், சுயேச்சை சின்னத்திலும் போட்டியிட்டன.
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தொகுதி வாரியாக பா.ஜ.க வுக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதம், வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து, உளவு துறை தகவல் சேகரித்து, கட்சி மேலிடத்திடம் வழங்கிஉள்ளது.
அதன் அடிப்படையில், ‘கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, தேனி, தர்மபுரி, ராமநாதபுரம், வேலுார், பொள்ளாச்சி ஆகிய, 8 தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.