திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து அமைதியான முறையில் போராடிய விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த திமுக அரசு, விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் மற்றும் தமிழக பாஜக ஆகியோரின் தொடர் எதிர்ப்பை அடுத்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதுதொடர்பாக திமுக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்தநிலையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சமூக வலைத்தளத்தில் திமுக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
இப்படி ஒரு கேவலமான அராஜகமான பத்திரிகை செய்தியை நான் பார்த்ததில்லை. தமிழ்நாடு அரசு 6 விவசாயிகள் குடும்பத்தை அழைத்து அவர்கள் அற வழியில் போராடியது தவறு என்று அவர்கள் குடும்பத்தினரை சொல்ல வைத்து அரசு செய்த கொடிய குற்றத்தை உணராமல், இவர்கள் ஏதோ மன்னித்து அருளிய கடவுள் போல் ஒரு ஆணவ வெளியீடு. அருள் ஆறுமுகம் பக்கத்து மாவட்ட விவசாயி என்பதாலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவரை scapegoat ஆக்கலாம் என்று நினைக்கிறது அரசு. அப்படி பார்த்தால் விவசாயி அல்லாத ஸ்டாலின் 8 வழி சாலை எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுத்தற்காக தமிழ்நாடு அரசு ஸ்டாலினை குண்டாசில் உள்ளே தள்ளுவார்களா ?
முதல்வரும் அரசும் தான் செய்த தப்பை உணரவில்லை. அருள் மீதான குண்டாசும் ரத்து செய்யப்பட வேண்டும். அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு சிறையில் உள்ள விவசாயிகள் 20 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அரசு தான் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயிகள் அல்ல. தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் !