தமிழகத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடருக்கு மாநில அரசு தன் நிதியிலிருந்து செலவிட்ட தொகை எவ்வளவு போன்ற விவரங்களை வெளியிடுவீர்களா? என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரைச் சந்தித்த எட்டு மாவட்டத்து மக்களுக்கு ரூபாய்.37 ஆயிரம் கோடியை நேரடியாக உதவி செய்தாரா பிரதமர் ? மத்திய அரசிடம் இருந்து நிதி வராத போதும் ரூபாய். 3406.77 கோடி நிதி வழங்கி நிவாரண பணிகளை செய்து மக்கள் நலன் காக்கும் அரசு தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசிடம் நிவாரண பணிகளுக்கு 37 ஆயிரம் கோடி கேட்டதாக கூறுகிறீர்கள்; ஆனால், 3406.77 கோடி வழங்கியதாக சொல்கிறீர்கள். பத்து விழுக்காடு கூட இல்லையே ஏன்? அந்த 3406 கோடியில் மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண பங்கான 900 கோடி ரூபாய் மற்றும் வெள்ள மேலாண்மை நிதியாக ரூபாய்.561, ஆக மொத்தம் ருபாய் 1461 கோடி கொடுத்துள்ளதே! மேலும், முதலமைச்சர் நிவாரண நிதி உட்பட சி பி சி எல் நிறுவனம் அளித்த தொகை ஆகியவையும் இதில் அடங்கும் தானே? அப்படியானால் மாநில அரசு தன் நிதியிலிருந்து செலவிட்ட தொகை எவ்வளவு போன்ற விவரங்களை வெளியிடுவீர்களா?