ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த சிலையைத் திறந்துவைத்தார். இந்த சிலை சமூக நீதிக்கான சிலை என்று அழைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் அம்பேத்கர் ஸ்மிருதி வனத்தில் உள்ள 81 அடி பீடத்தில் நிறுவப்பட்டுள்ள 125 அடி உயர சிலை (மொத்த உயரம் 206 அடி) உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை என்றும், அம்பேத்கரின் தனித்துவத்தையும் அவருடைய சீர்திருத்த சிந்தனைகளையும் பிரதிபலிக்கிறது என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.
நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில், குறிப்பாக பெண்களின் வரலாற்றில் அம்பேத்கர் செல்வாக்கு செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் சிலையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்துவைத்தார்.
உலகில் உள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே இதுதான் மிகவும் உயரமான சிலை என்று பெயர் பெற்றுள்ளது.
அம்பேத்கரின் இந்த மாபெரும் சிலையானது ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 100 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிலைக்கான மூலப்பொருட்கள் பெறுவது முதல் வடிவமைப்பை இறுதி செய்வது வரை அனைத்தும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே நடைபெற்றுள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
சிலையை நிறுவுவதற்கு நகரின் மையத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதானத்தைஆந்திர மாநில அரசு தேர்ந்தெடுத்தது. இந்த மைதானத்தில் காலை மற்றும் மாலையில் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சிலை அமைந்துள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் அனுபவ மையத்தில் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறுஎல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
இந்த சிலையை எழுப்ப 400 டன் எடையுள்ள இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலை வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வண்ணம் இசை நீருற்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் அம்பேத்கரின் மிக உயரமான சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜயவாடாவில் உள்ள இந்த அம்பேத்கரின் சிலையானது, நாட்டின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகவும் கருதப்படுகிறது. உலகின் இரண்டாவது உயரமான அம்பேத்கர் சிலை,அண்டை மாநிலமான தெலங்கானாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகின் உயரமான 50 சிலைகள்பட்டியலிலும் இது இடம்பெற்றுள்ளது.