யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம்… சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்!

யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம்… சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்!

Share it if you like it

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, திகார் சிறைத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் மீதான மற்ற வழக்குகளில் அவரை காணொலி காட்சி மூலமே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், முப்தி முகமது சயீத்தின் மகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, துப்பாக்கி ஏந்திய போலீஸ்படை புடைசூழ யாசின் மாலிக் கோர்ட் அறைக்குள் நுழைந்தார். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், கோர்ட் உத்தரவு இல்லாமல் அவர் ஆஜர்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து யாசின் மாலிக் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு துஷார் மேத்தா ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் கோர்ட் உத்தரவின்றி யாசின் மாலிக் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டது கடுமையான பாதுகாப்பு குறைபாடு என்று வருத்தம் தெரிவித்தவர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாசின் மாலிக் தப்பியிருக்கலாம், அல்லது வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டிருக்கலாம், அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். இப்படி ஏதேனும் நடந்திருந்தால் யார் பொறுப்பாவது? எனவே, அனுமதின்றி அவரை விசாரணைக்கு அழைத்து வந்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் பேரில் யாசின் மாலிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு காரணமாக இருந்த ஒரு துணை கண்காணிப்பாளர், 2 உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒரு தலைமை வார்டர் ஆகிய 4 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. சஞ்சய் பெனிவால் உத்தரவு பிறப்பித்தார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாளில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜீவ் சிங் விசாரணையில் இறங்கி இருக்கிறார்.


Share it if you like it