தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
இது மட்டுமின்றி, ராஜஸ்தான் – 12, உத்தர பிரதேசம் – 8, மத்திய பிரதேசம் – 6, அசாம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் – தலா 5, பிஹார் – 4, மேற்கு வங்கம் – 3, அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா – தலா 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிகோபார், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள் – தலா 1 தொகுதி எனநாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது ! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!