வங்கி பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானுவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக், சகோதரரும், வி.சி.க முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், என்பவரிடம், நேற்று முன்தினம், ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நேற்றும் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது, வங்கி கணக்கு விபரங்களை சலீம் தாக்கல் செய்தார்.
அதில், சந்தேகப்படும்படியான பண பரிவர்த்தனைகள் குறித்து, அதிகாரிகள் கேட்டனர். வெளிநாடுகளில் இருந்து நன்கொடை என, நிதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
அந்த வெளிநாட்டு நபர்கள் யார், சலீமுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு, இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் சலீமுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏன், ஜாபர் சாதிக்குடன் கைதாகி சிறையில் உள்ள சதானந்தம் வங்கி கணக்கிற்கு, பணம் அனுப்பி இருப்பது ஏன், அது போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணமா என, அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு, சலீமிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது.