அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது கவிஞர் கண்ணதாசன்!

அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது கவிஞர் கண்ணதாசன்!

Share it if you like it

எங்கே நிம்மதி…எங்கே நிம்மதி..?

எதன் மீது சந்தேகம் வந்தாலும் நிம்மதி பாழாகிறது. இது மனைவியாயினும் சரி, மகேஸ்வரனாயினும் சரி! எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி நில். ஆனால், தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனத்தையும் கெடுத்துக்கொள்ளாதே. சாப்பிட்டு முடிந்தபின், எதைச் சாப்பிட்டோமோ என்று சந்தேகப்பட்டால், அடிவயிற்றைக் கலக்கும். சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

கல்யாணம் கட்டி சாந்தி முகூர்த்தம் முடிந்தபின் ‘இதையா கட்டிக்கொண்டோம்’ என்று நினைத்தால் நிம்மதி அடியோடு போய்விடும். முன்னாேல யோசி. யோசித்து செய்த முடிவுகளில் நம்பிக்கை வை. திருப்பதிக்குப் போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி வந்தால் அப்போது நிம்மதி இருக்காது. மீன் கூடைக்குப் பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது; பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவெறுப்பே தோன்றும். நண்பன் தீயவன் என்றால், விலகிவிடு; நல்லவன் என்றால் நம்பிவிடு.

விலகியவனை நம்பத் தொடங்காதே; நம்பியவனை விலக்கத் தொடங்காதே. ‘இன்றையப் பொழுது நன்றாக இருக்கும்’ என்று நம்பு; நன்றாகவே இருக்கும்.

திருநீறோ, திருமண்ணோ இடும்போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும் வரை மூளை பிரகாசிக்கும். நம்பியவர் கெட்டாரா? நம்பாதவர் வாழ்ந்தாரா? ஒரு தாயின் தெய்வ நம்பிக்கையால், புத்தியில்லாது இருந்த நானும் ஓரளவு புத்தியுள்ளவனானேன். என்னுடைய தெய்வ நம்பிக்கையால் நான் எதிர்பாராத அளவுக்குச் சூழ்நிலைகள் வாய்த்துள்ளன.


Share it if you like it