இந்து பக்தர்களுக்கு சலுகை காட்டுவது போல் அமைச்சரின் இந்த அறிவிப்பு உள்ளது – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கருத்து..! 

இந்து பக்தர்களுக்கு சலுகை காட்டுவது போல் அமைச்சரின் இந்த அறிவிப்பு உள்ளது – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கருத்து..! 

Share it if you like it

ஆலயங்களில் அனைத்து வகையான கட்டணங்களையும் ரத்து செய்யவேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் நீண்ட  அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியதாவது.

தமிழக சட்டமன்றத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் மொட்டை இலவசம் என்றும், திருமணத்தில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு இலவச கட்டணம் என்றும் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக தோன்றினாலும் உண்மையில் பக்தர்கள் அனைவருக்கும் நன்மை பயப்பதல்ல. நம் முன்னோர்கள், மாமன்னர்கள் கோவில்களைக் கட்டி அந்தக் கோவிலின் பரமாரிப்பிற்காக சொத்துக்களை எழுதி வைத்ததே அந்த வருமானத்தின் மூலம் கோவில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் , தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்ககூடாது என்பதனாலும் தான். மாமன்னர்

 முத்து விஜய ரகுநாத சேதுபதி, தனது மருமகன் தண்டத்தேவர் ராமேஸ்வரம் வரும் பக்தர்களிடம் பரிசல் பணம் பெற்றதற்காக, தனது மகள்கள் விதவைகளானாலும் சரியென்று அவருக்கு மரண தண்டனை விதித்தவர். இது தான் தமிழகத்தில் கோவில்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படவேண்டும் என்பதற்கு உதாரணம். அமைச்சர் அவர்கள் எதோ இந்து பக்தர்களுக்கு சலுகை காட்டுவதுபோல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக கோவில்களில் அனைத்திற்கும் காசு கொடுக்கவேண்டும் என்பது இந்து சமய அறநிலையத்துறை வந்தபிறகு தான் என்பதை மறந்துவிடக்கூடாது .

கோவில்களில் பார்க்கிங் கட்டணம், காதுகுத்த கட்டணம், அர்ச்சனை கட்டணம், அபிஷேக கட்டணம் என்று இன்னும் பல்வேறு கட்டணங்கள் மூலமாக இந்த அரசு வருவாய் வசூலித்துக் கொண்டிருக்கின்றது. மாறாக கோவில்களில் பக்தர்களின் வசதிக்காகவோ, சமய வளர்ச்சிக்காகவோ எதையுமே அரசு செய்யவில்லை. இந்த அடிப்படையில், இந்துமுன்னணி பேரியக்கம் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் எதற்கும், எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக தரிசனம் செய்வதற்கு அரசு அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் வைத்திருக்கிறது.

கடவுள் முன்பு அனைவரும் சமம் இதில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது ஆகவே அமைச்சர் அவர்களும், தமிழக அரசும் உண்மையிலேயே ஆலயங்களுக்கும், பக்தர்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்று கருதினால் அனைத்து வகை கட்டணங்களையும் ரத்து செய்து பக்தர்கள் இலவசமாக இறைவனை தரிசனம் செய்ய ஆவன செய்யவேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

நன்றி ; இந்து முன்னணி.


Share it if you like it