பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னால் சிந்து பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-ன் வளர்ச்சியும் செல்வாக்கும் அபரிதமாக இருந்தது. 1946 ஆகஸ்ட் 5 அன்று, கராச்சியில் ஃபயர் ப்ரிகேட் மைதானத்தில், ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் பரம பூஜனீய குருஜி அவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. கராச்சியின் மொத்த மக்கள் தொகை 6 லட்சம். அதில் பாதிபேர், அதாவது 3 லட்சம் பேர் ஹிந்துக்கள். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம்.
அதேபோல் 1946 ஆகஸ்ட் 7 அன்று ஹைதராபாத்தில், முஸ்லீம் லீக்கின் எதிர்ப்பையும் மீறி, நேஷனல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் குருஜி கலந்து கொண்டார். ஹைதராபாத்தின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம். அதில் 65,000 பேர் ஹிந்துக்கள். அதில் ஆண்களும் பெண்களுமாக 35,000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். மேற்கண்ட இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-ன் பலத்தைக் காட்டுவதாக அமைந்தன.
1946ல் ஜவஹர்லால் நேருவும் ஒரு முறை, சிந்து பகுதியில் இருக்கும் ஹைதராபாத் பகுதிக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அந்த சமயத்தில் காங்கிரசும் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நேருவும் தனது கூட்டங்களில் பி்ரிவினையை தீவிரமாக எதிர்த்துப் பேசி வந்தார். அவருடைய கூட்டங்களில் “பாக்கிஸ்தான் மூர்தாபாத்” என்ற கோஷமும் ஒங்கி ஒலித்தது. ஹைதராபாத்தில் முஸ்லீம் லீக் வலிமையுடன் இருந்ததால், நேருவுடைய பாகிஸ்தான் எதிர்ப்பு பேச்சுக்கு எதிராகக் கலகம் நடக்கலாம் என கருதப் பட்டது.
எனவே காங்கிரஸ் தலைவர்களான சிமன்தாஸும், லால்கிஷன்சந்தும், ஆர்.எஸ்.எஸ் பொருப்பாளர்களை அணுகினார்கள். சவாலை ஏற்றுக் கொண்டனர் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள். பெரும் எண்ணிக்கையில் நேருவின் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் கூட்டத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டார்கள். கூட்டத்தில் கலகம் செய்ய முயற்சித்தவர்களும் உடனடியாக அடக்கப் பட்டார்கள். கூட்டம் அமைதியாக நடந்தேறியது.