Share it if you like it
- மயிலாடுதுறை அருகே ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துகுப்பை ஊராட்சியில் கடந்த மாதம் ஆண் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் அந்தப் பகுதியை வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபர் குணமடைந்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதையடுத்து 21 நாட்களுக்கு பிறகு, சீல் வைக்கப்பட்ட தடுப்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
- இதனால் உளுத்துகுப்பை கரோனா தொற்று இல்லாத கிராமமாக மாறியது. இதையடுத்து கடந்த 21 நாட்களாக கிராமத்தில் முகாமிட்டுத் தங்கி தங்களுக்கு சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.
- இதனையடுத்து நேற்று அந்த களப்பணியாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தங்கள் கிராமத்துக்கு வரவழைத்தனர். வரிசையாக நின்ற கிராம மக்கள் அனைவரும், அவர்களுக்கு மலர்களைத் தூவி, கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- இதைத் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் தனிமனித இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது.
Share it if you like it