சென்னையில் பிரதமர் மோடி!

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.2,437 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் திறந்து வைக்கிறார்.

முன்னதாக இன்று தெலுங்கானா மாநிலம் ஐதரபாத் சென்ற பிரதமர் மோடி அங்கு செகந்திராபாத் – திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார். மேலும் 5 நெடுஞ்சாலைக்கான பணிகள் உட்பட ரூ.11,300 கோடி மதிப்பிலான பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி மதியம் 2.30 மணியளவில் சென்னை வருகிறார்.

பிரதமரின் வருகையைக் முன்னிட்டு நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22,000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைவதற்கான பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு காவல்துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தன் வருகையின் முதல் கட்டமாக சென்னை விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை துவங்கி வைக்கிறார். இதன் முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலைய அதிகாரிகளின் கருத்துப்படி புதிய ஒருங்கிணைந்த முனையம் 2.20 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துக்கான தேவையை இது பூர்த்தி செய்யும். பயணிகளுக்கு உயர்தர உள்கட்டமைப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும் இந்த முனையம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முனையத்தில் 108 குடிவரவு கவுண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வருகை மற்றும் புறப்படும் பகுதிகளுக்கு இடையில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்து செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் பயணிகளுக்கான பயண அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்

ஒருங்கிணைந்த புதிய முனையத்தின் திறப்பு விழாவிற்கு பின் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

சென்னை – மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழகத்தில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இன்று பிரதமரால் துவங்கி வைக்கப்படுகிறது. இது நம் நாட்டின் 12வது வந்தே பாரத் ரயிலாகும்.

மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த அதிவேக வந்தே பாரத் விரைவு ரயில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் 130 கிமீ வேகத்தில் 5.50 மணி நேரத்தில் இலக்கை அடையும், இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட 1.20 மணிநேர பயண நேரம் மிச்சமாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 11.50க்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்.

பிறகு சென்னையில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.15 மணிக்கு சென்றடையும். நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயிலில் பயணம் மேற்கொள்வது விமானத்தில் பயணிப்பதற்கு இணையான அனுபவத்தை தரும் என கூறப்படுகிறது.

வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார் பெட்டிக்கான கட்டணம் ரூ.1,215. எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிக்கான கட்டணம் ரூ. 2,310 ஆகும்.

நாட்டின் மற்ற வந்தே பாரத் ரயில்களில் இல்லாத ஒரு அம்சம் சென்னை – கோவை இடையேயான இந்த வந்தே பாரத் ரயிலில் உள்ளது. அது எதிரே வேறு ரயில் வந்தால் 50 மீட்டருக்கு முன்பு தானே நிற்கும் வகையிலான சென்சார் அமைப்பு முதல்முறையாக இந்த வந்தே பாரத் ரயிலில் பொருத்தப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்த பின் பிரதமர் மோடி காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பல்லாவரத்தில் உள்ள ஆல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் தாம்பரம் – செங்கோட்டை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

சென்னையில் தன் பணிகளை முடித்த பின் மைசூருக்கு செல்லும் பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழகம் வருகிறார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள யானைகள் முகாமில் வசிக்கும் யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த தம்பதிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் சரணாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொம்மன்,பெள்ளி தம்பதிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போராட்டம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இன்று சென்னையில் அவர் செல்லும் வழியில் கறுப்பு கொடி காட்டப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளால் பிரதமர் மோடியின் வளர்ச்சி பணிகள் எந்த வகையிலும் தடைப்பட போவதில்லை. அவரது தலைமையில் இன்னும் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நாடு முன்னேறி செல்லும் என்பதில் சந்தேகமில்லை.


Share it if you like it