தமிழகத்தில் இஸ்ரோவின் ஏவுதளம் அமையவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது ஏவுகணைகளை ஏவ ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தை பயன்படுத்திவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது ஏவுதளத்தை தமிழகத்தில் அமைக்கவேண்டும் இங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகபட்டினத்தில் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றோம் என்றார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இஸ்ரோ தலைவர் சிவன், வளர்ந்த நாடுகளில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அதே போன்று நமது நாட்டிலும் இரண்டாவது ஏவுதளம் அமையவுள்ளது, அது குலசேகரபட்டினத்தில் அமைப்பது மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் அருகிலேயே மகேந்திரகிரியில் திரவஎரிபொருள் நிலையம் உள்ளது என்றார்.