மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் பற்றிய காங்கிரஸ் கட்சியின் சேவா தள பிரிவு புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் வீர சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஆங்கிலேய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றதாகவும், அவருக்கும், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கும் உடல் ரீதியாக தவறான உறவு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கு மராட்டியத்தில் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்தது. அந்த புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கூறியது.இந்த நிலையில், அதன் மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் வீர சாவர்க்கர் பற்றி சர்ச்சை கருத்துகள் இடம் பெற்று உள்ள அந்த புத்தகத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் கூறுகையில், “வீர சாவர்க்கர் தற்போது உயிரோடு இல்லை. அவரை பற்றி உங்களுக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தற்போது இல்லாத ஒருவருக்கு எதிராக இதுபோன்ற தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுவது சரியானதல்ல. எனவே அந்த புத்தகத்தை திரும்ப பெற வேண்டும்” என்றார்.