மனித இனத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் அரக்கனை உலகம் முழுவதும் அழிக்கும் பணி நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இதற்கான பணி நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வீணாகும் பிளாஸ்டிக்கை சாலை கட்டுமானத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது. இந்த கழிவை அகற்றுவது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 200 கோடி பெட் பாட்டில்களை மறு சுழற்சிக்கு உட்படுத்தி உள்ளது. இந்த அளவை இரட்டிப்பாக்கவும் முயற்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தாருடன் 8 சதவீதம் முதல் 10சதவீதம் பிளாஸ்டிக்கை சேர்ப்பதன் மூலம் சாலை அமைப்பு உறுதிப்படும்.
அத்துடன் சாலையில் நீர்புகாத் தன்மை கொண்டதாக இருக்கும். இத்தகைய தொழில்நுட்பம் மூலம் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ஆகும் செலவில் ரூ. 1 லட்சம் வரை மீதமாகும் என்று தெரிவித்துள்ளது.. இப்புதிய தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதது.
அதேபோல சாலை கட்டுமானத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (என்ஹெச்ஏஐ) தம் ஆலோசனைகளை ரிலையன்ஸ் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் 50 டன் வீணான பிளாஸ்டிக் மூலம் 40 கிலோமீட்டர் சாலையை அமைத்துள்ளது.
இந்த சாலையானது இந்நிறுவனத்தின் நகோத்தம் உற்பத்தி ஆலை வளாகத்தில் அமைந்துள்ளது. அடுத்த தலைமுறையினருக்கு பிளாஸ்டிக் இல்லாத இப்பூமியை அவர்களின் கரங்களில் ஒப்படைக்கும் பணி ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதனை உணர்ந்தால் இது சாத்தியமே.
மனித இனத்தின் சாதனைகளில் ஒன்றாக 36,000 அடி ஆழம் கொண்ட மரியானா டிரெஞ்ச் என்னும் உலகின் மிக ஆழமான கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கைப்பற்றிய பொருட்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று என்பது அதிர்ச்சிகுள்ளான விஷயம் என்பதை நாம் மறந்து விட கூடாது.
பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ராஜகோபாலன் வாசுதேவன் அவர்கள் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.