ஆஸ்திரேலியாவில் கடந்த 5 மாதங்களாக பற்றி எரியும் காட்டுத் தீயினால் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்திருக்கலாம் என இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காட்டுத் தீ பற்றியெரிந்து வருகிறது. பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து எரியும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வருகிறது.
தற்போது எரியும் நெருப்பு இதுவரை கண்டிராத பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக புவியியல் மற்றும் விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காய்ந்த மரங்கள் மற்றும் புதர்களில் எரியும் நெருப்பு சுமார் 200 அடி உயரம் வரை எரிந்து நெருப்புச் சூறாவளியாக மாறி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பற்றி எரியும் தீயால் 14.5 மில்லியன் ஏக்கர் நிலம் பாழ்பட்டுப் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரு நெருப்பு பற்றி எரிந்த நிலப்பரப்பு அமெரிக்காவில் மேற்கு வர்ஜினீயா மாகாணத்தை விட அதிகம் என்று குறிப்பிடும் புவியியலாளர்கள் கடந்த 2018ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை விட 3 மடங்கு அதிகம் எனவும், கடந்த ஆண்டு அரிசோனாவில் ஏற்பட்ட நெருப்பை விட 6 மடங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகள், வாகனங்கள் என எதையும் விட்டு வைக்காக காட்டுத் தீயால் ஏராளமான வனவிலங்குகளும் உயிரிழந்துள்ளன. உலகின் சிறிய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பற்றி எரிவதால் கங்காரு, கோலா கரடி, இருவாழ்வியான பிளாடிபஸ் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் பலியாகி வருகின்றன. கடந்த 5 மாதங்களாக பற்றி எரியும் காட்டுத் தீயினால் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்திருக்கலாம் எனவும், மேலும் பல்வேறு உயிரினங்கள் முற்றிலும் அழிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெருப்பிலிருந்து மீட்கப்படும் சிறிய விலங்குகளின் பரிதாபக் குரல் பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது.
நெருப்பு காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணிகளால் 18 பேர் வரை உயிரிழந்திருப்பதாக நியூ சவுத்வேல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீயின் வெப்பம் மற்றும் தரையில் ஏற்படும் சூடு காரணமா உலகின் மிகப் பெரிய பவளப்பாறையான தி கிரேட் பேரியர் ரீஃப் (The Great Barrier Reef) அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவி வரும் இத்தகைய சூழல் அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொபார்கோ (Cobargo) நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற அவரை, அங்கிருந்த ஒருவர் முட்டாள் என வசைபாடினார். இதனிடையே ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 3500 பேரை அந்நாட்டு அரசு ஈடுபடுத்தி உள்ளது.
தொடர்ந்து எரியும் புதர்த் தீ எதிரொலியாக தமது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஜூன் மாதம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.