தமிழ் மக்களின் நாகரீகம் மிகவும் பிரசித்தி பெற்றது. வாசல் தோறும் கோலமிடுவது, நவராத்திரி அன்று கொலு வைப்பது, பெண்கள் தலையில் பூ வைப்பது போன்றவைகள் தமிழ் மக்களுக்கே உரித்தான சிறப்பு அம்சங்கள் ஆகும்.
பல நூற்றாண்டு காலங்களாகவே, மக்கள் வாழும் உறைவிடமாக தமிழகம் இருந்து வருகின்றது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் கடல் தாண்டி, தங்களின் வெற்றிக் கொடியை நாட்டி வந்தனர். சோழ மன்னர்களோ, தெற்கு தீப கற்பப் பகுதி முழுவதிலும் தங்களின் பேரரசை விரிவு படுத்தினார்கள்.
நமது நாட்டிற்கு வந்த இஸ்லாமிய, கிறிஸ்துவ போன்ற அந்நிய படைகளின் ஊடுருவல் காரணமாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய வந்து, காலப் போக்கில் “கிழக்கிந்திய கம்பெனியை”, மசூலிப்பட்டினம் என்ற இடத்தில் 1611ம் ஆண்டில் தொடங்கினார்கள். “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரில் தென் இந்தியாவில் உள்ள பல பகுதிகள் ஒன்றிணைந்து உருவாக்கப் பட்டது.
தமிழக எல்லைகள்:
நமது நாட்டு விடுதலைக்குப் பின் மொழியின் எல்லைகளை அடிப்படையாக கொண்டு மாநிலம் உருவாக்கப் பட்டது. தமிழ்நாடு பொருத்தவரையில், வடக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகாவும், மேற்கே கேரளாவும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக அமைந்து உள்ளது.
மொழி வாரியாக மாநிலங்கள்:
கிறிஸ்தவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கி “மெட்ராஸ் ராஜ்தானி” என ஓரே மாநிலமாக இருந்தது. மொழி வாரி மாநிலமாக பிரிக்க வலியுறுத்தி, சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர், கால வரையின்றி உண்ணா விரதம் மேற் கொண்டார். அவரின் மறைவைத் தொடர்ந்து, வன்முறை வெடித்தது. இதனால் 1953 ஆம் ஆண்டு, மத்திய அரசு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டில் நவம்பர் 1-ஆம் தேதி “மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா” என மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப் பட்டது.
“மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றக் கோரி, கோரிக்கை எழுந்தது. அதனால் 1968 ஆம் ஆண்டு, ஜூலை 18 அன்று, தமிழக அரசு, “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ் நாடு” எனப் பெயர் மாற்றக் கோரி, தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்றப் பட்டது.
1968 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன் வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இந்த வரலாற்று சம்பவத்தை ஆண்டு தோறும் கொண்டாடும் வகையில், நவம்பர் ஒன்றாம் தேதி, “தமிழ் நாடு” உதயமான நாளாக கொண்டாடப் படும் என தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்ட சபையில் ஜூலை 20, 2019 அன்று அறிக்கை வெளியிட்டார்.
தமிழக நிலவரம்:
தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு – 1,30,058 சதுர கிலோ மீட்டர்,
மக்கள் தொகை – 7,21,47, 030,
தலைநகரம் – சென்னை,
37 மாவட்டங்கள்,
87 வருவாய் பிரிவு,
310 தாலுகாக்கள்,
1349 வருவாய் நிர்வாகம்,
17,680 வருவாய் கிராமங்கள்,
15 நகராட்சி நிறுவனங்கள்,
121 நகராட்சிகள்,
385 பஞ்சாயத்து யூனியன்கள்,
528 நகர பஞ்சாயத்துகள்,
12,618 கிராம பஞ்சாயத்துகள்,
39 பாராளுமன்ற தொகுதிகள்,
234 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.
இவை அனைத்தும் நிர்வாக வசதிக்காக வடிவமைக்கப் பட்டது. பல்வேறு கூறுகளாக இருந்தாலும், இவை அனைத்தும் தமிழகம் என்னும் மாநிலத்தின் அங்கங்கள் ஆகும். இது போலவே, நாடு முழுவதும், நிர்வாக வசதிக்காக மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப் பட்டு, நிர்வகிக்கப் பட்டும் வருகின்றன.
தனி நாடு கோரிக்கை:
திராவிட கழகத்தினர், “திராவிட நாடு” என்ற கோரிக்கையை, அது உருவான நாள் முதலே கோரி வந்தனர். திராவிட நாடு என்பது, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சில பகுதிகள் – ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா, இலங்கையை உள்ளடக்கியது ஆகும். 1963 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்புவோர்கள் மீது, “தேசிய பாதுகாப்பு சட்டம்” மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னர், திராவிட நாடு என்ற கோரிக்கையை அவர்கள் கை விட்டனர்.
ஆனால்,”நீறு பூத்த நெருப்பாக” அவ்வப் போது தனி நாடு கோரிக்கை, தமிழகத்தில் இருந்து சில பிரிவினைவாதிகள் எழுப்பி வருகின்றனர்.
பிரிவினைவாத கோரிக்கையும் தமிழக மக்களின் நிராகரிப்பும்:
பிரிவினைவாதம் பேசும் அனைவரையும், தமிழக மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். எந்தத் தேர்தலிலும், பிரிவினைவாதிகள் கணிசமான வாக்குகளை கூட பெற்றது இல்லை. அவர்கள், ஆரம்பத்தில் இருந்தே தமிழக மக்களால், புறக்கணிக்கப் பட்டனர். தனி நாடு கோரிக்கையை, திமுக கைவிட்ட பிறகு தான், அவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர், என்பது வரலாற்று உண்மை.
தங்களை வெளிக் காட்டிக் கொள்வதற்காகவே “தனிநாடு கோரிக்கை”யை, சிலர் எழுப்பிக் கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு என்று தனிக் கொடியை, சில பிரிவினைவாத கட்சிகள் அறிமுகப்படுத்தியது. நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், தமிழ் தேசிய பேரியக்கம் போன்ற அமைப்புகள், “தமிழ்நாட்டுக்கு என்று தனிக் கொடி” என்ற கோரிக்கையை முன் வைத்தது. அவர்கள் ஒரு கொடியையும் வெளியிட்டனர். ஆனால், அது தமிழக மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டு, எந்த இடத்திலும் அது பயன் படுத்தப்படாமலே இருந்து வருகின்றது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கூறியதுபோல “முப்பது கோடி முகமுடையாள், எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற வாக்கிற்கு ஏற்ப, தமிழக மக்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன், தேசப் பற்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நிர்வாக வசதிக்காக பல்வேறு வகையில், பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப் படுவது என்பது இயல்பானது தான். ஒரு கட்சியில் கூட, பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு, அந்தந்த பிரிவுக்கு ஏற்ப , நிர்வாகிகளை நியமிப்பது என்பது இயல்பானது தான். எனினும், “அனைவரும் ஒரே குடையின் கீழ்”, ஒரே கட்சியினராகத் தான் கருதப்படுவார்கள். அது போலவே மொழி வாரி மாநிலங்களாக, பல்வேறு மாநிலங்கள் என இருந்தாலும் அனைத்து மாநிலங்களும், பாரத நாட்டின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றது.
“ஆயிரம் உண்டு இங்கு சாதி – எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி?”:
நமக்குள் ஆயிரம் சாதிகள் இருந்தாலும், அந்நியனுக்கு இங்கே என்ன வேலை என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, நமக்குள் நிறைய பேதங்கள் இருந்தாலும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கூற்றுக்கு ஏற்ப, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். நமக்குள் பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒற்றுமையாக இருக்கும் நம்மவர்கள் மனதில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது கூட, நாம் தமிழர் கட்சி ஒரு கொடியையும், மே 17 இயக்கம் ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது தான் தமிழ்நாட்டு கொடி, என இரண்டு பிரிவுகளும் கூறி வருகின்றனர், என்றாலும், இரண்டுமே தமிழ் நாட்டுக் கொடி அல்ல, தமிழ்நாடு என்றும் தேசியத்தின் பக்கம் என்ற எண்ணமே, தமிழக மக்கள் மனங்களில், மேலோங்கி இருக்கின்றது.
வேற்றுமையில் ஒற்றுமை:
“குமரியிலே ஒருவர் இருமினால், இமய மலையில் இருந்து ஒருவர் மருந்து எடுத்துக் கொண்டு செல்வார்”, என்பதே நமது நாட்டின் சித்தாந்தம். வட மாநிலங்களில், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், தமிழகத்திலும் மற்றும் மற்ற மாநிலங்களிலும் இருந்தும், நிறைய நலத் திட்ட உதவிகள் செய்வார்கள். அது போலவே, தமிழகத்திலும், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலோ, எந்த துயரங்கள் நேர்ந்தாலும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு வகையான உதவிகள் செய்வார்கள். சமீபத்தில் கூட, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு, தமிழகம் 10 கோடி ரூபாயும் மற்றும் பல்வேறு நிவாரண பொருட்களும் உதவியாக வழங்கி உள்ளது.
மற்ற நாட்டினர், நமது நாடு மீது, போர் தொடுத்த போது, அதிகமான நிதி உதவி வழங்கிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் என்றுமே முதல் இடத்தில் இருக்கும்.
பாரதியார் கூறியது போல, 30 கோடி முகங்கள் இருந்தாலும் (2018 கணக்கின் படி இந்தியா மக்கள் தொகை – 135.26 கோடி), நமது நாட்டில் உள்ள அனைவருக்கும், “நாம் இந்த நாட்டின் மைந்தர்கள்” என்னும் சிந்தனையே எப்போதும் இருக்கும். அவர்களை குழப்ப, பல்வேறு ரூபத்தில், சிலர் வந்தாலும், அவர்களது எண்ணம் நிறைவேறாது. வட மாநிலங்களில் உள்ள நகரங்களின் பெயர்களான காசி, பத்ரி, அமர்நாத், டில்லி போன்ற பெயர்கள், இன்றளவும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, சூட்டி வருவது, நமது ஒற்றுமையின் பலத்தையே காட்டுகின்றது. தமிழர்களின் இந்த செயல், நமது ஒற்றுமை சக்தியின் பலத்தை இன்னும் கூட்டுகின்றது.
தெய்வீகம், தேசியம் – நமது இரு கண்கள்:
தமிழகம் என்றுமே பிரிவினைவாதிகளுக்கு இடம் அளித்தது கிடையாது. நமது இந்து மதக் கடவுள்களை, இழிவு படுத்தியவர்களை, தமிழக மக்கள் எப்போதுமே புறக்கணித்து வந்தனர். ராமரை அவமரியாதை செய்தவர்களும், அதைப் பெருமையுடன் கூறி வந்தவர்களும், தற்போது, ஹிந்து மக்களின் எழுச்சியால், அவ்வாறு தாங்கள் செய்யவில்லை எனவும், அதற்கும் தங்கள் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும், திராவிட கழகத்தினர் கூறி வருவது, இந்து ஆதரவு நிலை, தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.
தமிழகத்திற்கு என தனிக் கொடியை அறிமுகப் படுத்தியவர்கள் இடையே ஒற்றுமை இல்லாமல், ஆளாளுக்கு ஒரு கொடியை அறிமுகம் செய்கின்றார்கள். அதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் தான், யாரும், அந்த கொடியை பின்பற்றுவது இல்லை. எந்த ஒரு தமிழரிடமும் சென்று, நமது நாட்டுக் கொடி என்னவென்று கேட்டால், நிச்சயமாக மூவர்ணக் கொடியே நமது நாட்டு தேசியக் கொடி என பதில் அளிப்பார்கள். அந்த அளவிற்கு, தமிழக மக்கள் மனதில், நமது நாட்டுக் கொடி என்றாலே, அது தேசியக் கொடி என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
தமிழகத்தின் சின்னம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம், அதன் இரு புறமும் நமது நாட்டின் தேசியக் கொடி இடம் பெற்று இருக்கும். தெய்வீகத்தையும், தேசியத்தையும் இரு கண்களாக கொண்டு வாழும் தமிழகத்தில், பிரிவினைவாதிகளுக்கு இடம் அளிக்காமல், தேச விரோத சக்திகளுக்கு வாய்ப்பு வழங்காமல், “நாம் அனைவரும் ஒன்று தான்” என நினைத்து, வாழ்ந்து, பழகி வருகின்றோம்.
தனது வாழ்நாளில் ஒரு முறையாவது, காசிக்கு சென்று வழிபட வேண்டும் என தமிழர்கள் நினைப்பதும், வடநாட்டில் உள்ளவர்கள், தனது வாழ்க்கையில், ஒரு முறையாவது, ராமேஸ்வரத்திற்கு சென்று, சிவனை வழிபட வேண்டும் என நினைப்பதுமே இந்த மண்ணின் மகத்துவம்.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,
ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்,
பிரிவினைவாதிகளை புறக்கணிப்போம்,
நமது ஒற்றுமையை உலகறியச் செய்வோம்”
– அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai