தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,225 பஸ்களுடன், சிறப்பு பஸ்களாக 4,950 பஸ்கள் என சென்னையில் இருந்து 16,075 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்பி வர வசதியாக 16-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கலுக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இருந்து திருப்பூருக்கு 1,200 பஸ்களும், கோவைக்கு 1,525 பஸ்களும் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பின்பு சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் நெல்லையில் இருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விரைவாக செல்வதற்காக சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.
பஸ்கள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிக்கவும் 94450-14450, 94450-14436 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.